பக்கம்:அறவோர் மு. வ.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

193

சிறப்பு டி. லிட் (D. Litt) பட்டம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது. தமிழ்ப் படித்த எவரும் இதுவரை பெறாத சிறப்பு இது.

சான்றாண்மைக்கு ஆழி

டாக்டர் மு. வ. அவர்கள் எளிமையும் தூய்மையும் தொண்டும் கனிவுங் கொண்டு இனிய புன்முறுவல் பூத்த முகத்துடன் காட்சியளிப்பார்கள். எந்தப் பதவி வகித்த நிலையிலும் செருக்கென்பது அவரிடம் ஒரு சிறிதும் காணப்படவில்லை. ஆடம்பரம் அவர் வாழ்வில் கால் கொள்ளவில்லை. எப்போதும் எவரையும் குறை தூற்றாத பண்பு, இயன்றவரை அனைவருக்கும் இயன்ற அளவு உதவுகின்ற மனப்பான்மை - இவை அவருடைய நீங்காப் பண்புகள்.

திருவள்ளுவர் கண்ட 'சான்றாண்மை’க்கு ஓர் உருவம்வடிவம் தந்தவர் இவர். சான்றாண்மைக்கு ஆழி என விளங்கிய இவர்கள் இயற்கை எய்திவிட்டார்கள்.

தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என்று மூச்சு ஓயுமட்டும் வாழ்ந்த ஓர் ஒப்பற்ற பெருமகனார் அவர்.

மதுரைப் பல்கலைக்கழகம் பல்கிப் பெருக, அஞ்சல் வழிக் கல்வித் துறை இந்தியாவிலேயே முதலிடம் பெற உயர்த்தி நின்ற ஒருவர் இன்று நம்மிடையே இல்லை.

தமிழ் இசைச் சங்க நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டு, பல ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தவர் இவர்.

சொற்பொழிவுகளுக்குச் செல்வதில் தயக்கங் காட்டிய இவர் நாடகங்களைப் பாராட்டிப் பேச ஒப்புக்கொண்ட நிலை, நாடகத் தமிழ் வளர்ச்சியில் இவர் காட்டிய அக்கறையினை உணர்த்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/196&oldid=1224417" இலிருந்து மீள்விக்கப்பட்டது