பக்கம்:அறவோர் மு. வ.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

அறவோர் மு. வ.

சமுதாய வாழ்க்கைக்கே அறம் கட்டாயம் வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ, அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்.

★ எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், உடல் உணர்ச்சி உள்ள வரையில், கணவன் மனைவி அல்லாத ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகாமல் இருப்பது நல்லது.

★ ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது இது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால். நொண்டியாக இருக்க வேண்டும். அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்.

★ கடவுள் எல்லா உயிர்களின் வாழ்வுக்கும் பொதுவான திட்டங்கள் வகுத்து, பொதுமையான ஆட்சி புரியும் ஒரு பெருஞ்சக்தி என்று உணரவேண்டும். கடவுள் எங்கும் என்றும் உள்ள பெருஞ்சக்தியாய் எல்லாப் பொருளுமாய், எல்லா உயிருமாய் விளங்குதலை எண்ண வேண்டும்.

★ ஆண்களில் ஐந்து சாதி உண்டு. மனைவியே தெய்வம் என்று சொன்னபடி கேட்டு அடங்கி நடப்பவர்கள் முதல் சாதி; குடும்பத்தில் பற்றும், தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/199&oldid=1224428" இலிருந்து மீள்விக்கப்பட்டது