பக்கம்:அறவோர் மு. வ.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

199

தொழில் செய்து உரமான தசை நரம்புகளைப் பெற்ற குடும்பத்திலிருந்து அவனுக்குப் பெண்ணைக் கட்டினால், அவர்களின் உடல் உறவு அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அப்படியே மெலிந்த உடம்பு உடைய குடும்பத்துப் பெண்ணை வலிய உடம்பு உடைய உழைப்பாளிக் குடும்பத்து ஆணுக்குக் கொடுத்தாலும் தீமைக்கு இடமாகும். பெண் விரைவில் நோயாளி ஆவாள். இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது ஒன்று உள்ளத்தின் பொருத்தமே. உள்ளத்தின் பொருத்தம் அமைந்து காதல் ஏற்பட்டிருந்தால். எந்தத் தொல்லையும் இல்லை. மெலிந்தவர், வலியவர், மூளை உழைப்பினர், கைகால் உழைப்பினர் என்று எந்த வேறுபாட்டையும் கடந்து அப்போது வாழமுடியும். ஆனாலும் கூடியவரையில் உடல் வளத்தையும் ஆராய்வது நல்லது.

★ இந்த உலகத்தில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்குகிறார்கள். நல்லவர்கள் நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள். அதனால்தான் உலகத்தில் தீமை தழைக்கிறது; நன்மை நலிகிறது.

★ வீட்டைத் துறப்பது, செல்வத்தை வழங்குவது, உயிரைக் கொடுப்பது இவைகளும் தியாகம்தான். ஆனால், அன்பானவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் தியாகம்தான் பெரிய தியாகம். அந்த விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை இல்லாவிட்டால், கணவன் மனைவி கூடிவாழ முடியாது. எவ்வளவு அறிவு இருந்தாலும் போரும் பிணக்கும் வளருமே தவிர, அன்பும் அமைதியும் வளரமுடியாது அதனால் கணவனும் மனைவியும் கற்கவேண்டிய முதல் பாடம் விட்டுக் கொடுப்பதுதான். அதுவே கடைசிப் பாடமும் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/202&oldid=1224436" இலிருந்து மீள்விக்கப்பட்டது