பக்கம்:அறவோர் மு. வ.pdf/43

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
அறவோர் மு. வ.
 

"கணவனைத் திருத்த முடியவில்லையா? அதற்காக அவனிடம் செலுத்த வேண்டிய அன்பைக் குறைத்துக் கொள்ளாதே; அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிடாதே. ஒருவனை மணந்து கொண்ட பிறகு அவனுடைய இன்பதுன்பமே உன் இன்பதுன்பம். இன்பதுன்பம் மட்டுமல்ல. ஆக்கமும் அழிவும் கூட. அப்படியே இருவருக்கும் பொதுவாகக் கருத வேண்டும். கணவனுடைய அழிவில் நீயும் கலந்து அழிவதில் ஒரு மகிழ்ச்சி வேண்டும்"

-அகல் விளக்கு, பக். 350

என்ற பகுதியில் சுட்டுகின்றார். 'அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண் பிறந்தார்க்குப் பொறையே பெருமை’ என்ற கொள்கையினையுடைய தமிழ்ப் பெண்கள் மரபில் வந்த - வருகின்ற - ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணும் போற்றிக் காக்க வேண்டிய கொள்கைகளை இந்தப் பகுதிகளில் உணர்த்துகின்றார் அறவோர் மு. வ. இல்வாழ்க்கையில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்குக் கணவனே முதன்மையானவன். மற்றவர்கள் யாவரும் அவனுக்கு அடுத்தபடியே. யார்யாரை எந்தெந்த நிலையில் வைத்துப் போற்ற வேண்டும் என்பதை,

"கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அன்பே முதன்மையானது; மக்கள் இரண்டாம் நிலையினர்; கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர்; நண்பரும் உறவினரும் நான்காம் நிலையினர்; புகழும் மதிப்பும் ஐந்தாம் நிலையின; கலையும் பொழுதுபோக்கும் ஆறாம் நிலையின; தெருவாரும் ஊராரும் ஏழாம் நிலையினர்; இப்படியே மற்றவற்றையும் மற்றவர்களையும் முறைப்படுத்தி வைத்துக் கொள்”

- தங்கைக்கு, பக். 74

என்று தங்கைக்குக் கூறுகின்றார். கணவனையே முதன்மையாகக் கொண்டு அவன் உள்ளம் அறிந்தொழுகும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/43&oldid=1204427" இருந்து மீள்விக்கப்பட்டது