16
மும்மடங் குமக்குக் கோபம் மூண்டாலும் சரியே, அண்ணா!
உம்முட னுதித்தா னுள்ளம் உணர்ந்திடீ ரெனினு மோரார்,
தம்மிடம் கூறும் சொல்லின் தரங்கூட அறியீ ரானீர்!
இம்மடங் கண்டென் நெஞ்சம் எண்மடங் கெரியு தின்று!
பெண்ணறி வதனை நானும் பெருமையாய் மதித்தேன்; ஆனால்,
அண்ணியி னறிவு மட்டும் அரைகுறை போலு மந்தோ!
வெண்ணிலா தவறி மண்ணில் விழுந்த'தென் றுரைத்தால், நீங்கள்
எண்ணியும் பாரா திவ்வா றியம்பவு மிசைந்தீ” ரென்றே,
இயல்புக்கு மாறாய் இளைஞன் எழுந்து செல்லல்
புயல்புக்க பூங்காப் போன்றான், புகன்றுவிட் டெழுந்தான்; போந்து
வயல்புக்கான்; வாவி புக்கான்; வயன்வாழைக் கொல்லை புக்கான்;
கயல்புக்குக் கலக்கும் கால்வாய்க் கரைபுக்கான், கால்புக் காங்கே!
இயல்புக்கு மாறா யெல்லாம் இருந்த'தென் றியம்பு மாறே.
பிளந்தது போலும் நெஞ்சைப் பீடித்த தெதுவோ? பேசித்
தெளிந்தநல் லறிவில் மாசைத் தீட்டிய தெதுவோ? தெண்ணீர்க்
குளந்தனில் பூத்த லர்ந்த கோமள மலரைக் கொய்தே
களந்தனில் நெருப்பி லிட்டுக் கறுக்கிய தெதுவோ காணீர்!
அடிபடாக் காளைக் கின்றோர் அடிபட்ட தெனவோ? அன்றேல்,
கடிபடா அரியே நின்று, கடிபட்ட தெனவோ? கன்ற,
இடிபடாத் தலையி லீட்டி இடிபட்ட தெனவோ கூறின்
பிடிபடா துவமை, மானப் பேய்படுத் தும்பீ டைக்கே!
கடிந்திவ்வா றண்ணன் பேசிக் காதினில் கேட்ட தன்று;
வடிந்திவ்வா றொழுகி நீரும் வந்துகண் கண்ட தன்று;
இடிந்திவ்வா நிடும்பை பற்றி இதயமு மெரிந்த தன்று:
நடந்திவ்வா றொருநாள் வந்து நைந்திடச் செய்த தன்றே!