18
"அகமொன்றி னோரைச் சாவும் அணுகாதாம்!" என்ற வேணி,
முகமொன்றி மலரக் குந்தி முறையாகப் படைக்க உண்டோன்,
"சுகமொன்று காணச் செய்தாய்; சூரியன் சரியா துச்சி
யுகமொன்று முடிய நிற்பின் உவப்புச்சி யுறுவே" னென்றான்.
காணத் தகுத்த வேணியின் சிரிப்பு
புன்னகை புரியும் போக்கில் புகன்றஇம் மாற்றம் கேட்டுச்
சென்னியைத் தாழ்த்திக் கன்னம் சிறுகுழி விழச்சி வக்கத்
தன்னெழி லங்கம் தாமும் தனித்தனிக் குலங்கு மாறாய்க்
கன்னிகை சிரித்தாள், காணக் 'கலகல' வெனவாய் விட்டே!
சோறு சுவையற்றதெனல்
நெய்விட்டுப் பிசைந்'திச் சோறு நேர்த்தி'யென் றுண்ணும் நித்யன்
மெய்விட்டுச் சிரித்த அந்த மெல்லியல் திகைக்க, மெல்லக்
கைவிட்டுக் கவளம் வாயைக் காணாது கலத்தில் வீழப்
பொய்விட்டுப் புகன்றான், "சோறு போயிற்று சுயைற்” றென்றே.
என்கண் நீர் சொரியுமெனல்
நவையற்ற நங்கை கேட்டு நகையற்று நவின்றாள்: "நானே
இவையிற்றைப் பொழுது நன்றாய் இருக்குமா றுமக்காய்ச் செய்தேன்;
துவையற்றொட் டுக்கொள்ளுங்கள்; துணைக்கிரு பொரியல்! சும்மா
சுவையற்ற தெனச்சொல் வீரேல் சொரியுமென் கண்ணீ', ரென்றே.
உன்சிரிப்பு செந்தேனாய் இனித்ததெனல்
"நான்சுவை யற்ற தென்று நவின்றதை நம்பாய் நீயும்!
தேன்சுவை யற்றுத் தேமா தீஞ்சுவை யற்றுத் தின்னும்
ஊன்சுவை யற்றுப் போமுன் உயர்தனிக் குரலி னோடும்
தான்சுவை யுற்று வந்த தனிச்சிரிப் பிதனா" லென்றான்.