21
பஞ்சாலைக் களமாம் கோவைப் பதியில்கால் பாகம் சொத்தம்!
செஞ்சாலி விளையும் தஞ்சைச் சீமையில் பகுதி சொந்தம்!
மஞ்சாலு முயர்ந்த நீல மலைமுக்கால் வாசி சொந்தம்!
நெஞ்சாலும் நினையாச் செல்வ நிலைக்கினி நீதான் சொந்தம்!
'புண்ணியம் புரிந்தோ னுக்கே பொருந்திடும் மனைவி யாயிம்
மண்ணினி லறத்தைப் பேணும் மாட்சிமை பிறர்க்குக் காட்டப்
பெண்ணெனப் பிறந்தா' ளென்று பேசினும் பிழையா காதுன்
அண்ணியப் பெண்ணின் கால்தூ சழகுக்கொப் பாகா ளப்பா!
பெண்ணைப்பார் முதலில் போய்நீ! பெருமகள் பேசா ளேனும்
கண்ணைப்பார்! உன்னைக் கண்டு களிநடம் புரிதல் காண்பாய்!
எண்ணிப்பார் இல்ல றத்தின் இனிமையை! இனிக்கல் யாணம்
பண்ணப்பார்! முடிந்தால் நீதான் பணக்கார' னென்றா ணண்ணன்.
தடுமாற்றமுற்ற தம்பி விடுமாற்றமிருந்து வேறு கூறுவது
'பாக்குக்கும் வெற்றி லைக்கும் பகட்டான துணிம ணிக்கும்,
நாக்குக்குப் பிடித்த மான நறுஞ்சுவை யுணவு கட்கும்
நோக்குக்கும் பொருத்த மன்றி, நுண்மையா யெண்ணிப் பார்த்தால்
காக்கைக்குக் கழுகின் விட்டில் கல்யாணம் முடிந்த தொக்கும்!
திருந்தாத செயலால் செல்வம் தேடினோர் பெண்ணைத் தேரின் ,
அருந்தாத அன்ன மாகும்; அணியாத ஆடை யாகும்;
மருந்தாத லின்றிச் சீவன் மாய்த்திடும் விடமு மாகும்;
பொருந்தாத திருமணத்தால் புகுவது பொல்லாங் கொன்றே
சதிவிலக் குக்குச் சட்டம் சரியெனின் சகத்தி லின்று,
துதிவிலக் குக்குச் சட்டம், தோப்பொடு தோட்டம் காடு
விதிவிலக் குக்குச் சட்டம், வேற்றுமை யின்றி வாழ
இதிவிலக் குக்குச் சட்டம், நீதிக்குள் புகும்நா ளைக்கே!