24
அழவேண்டு மென்றால் கட்டி அழுகின்றே ணன்றே லாற்றில்
விழவேண்டு மென்றால் சென்று விழுகின்றேன்; வெறுக்க வீணாய்
உழவேண்டாம் சொல்லேர் பூட்டி உண்மைக்கு மாறாய்! உங்கள்
பழிவேண்டாம்; பகர்க! என்ன பண்ணிட வேண்டும்?" என்றாள்,
பேச்சுவாக்கில் பிழை நேர்ந்ததெனல்
ஒழுக்கமொத் துரைத்த உண்மை உளத்தினைத் தொடவே சத்யன்,
'வழுக்குமத் தடத்தி லுள்ள வழிகுழி மேடுபாரா
திழுக்கிமெத் தெனவி ழுந்தான்' எனுமாறு திகைத்துத் தேறி,
அழுக்குமொத் தகத்தில் நீக்கி அன்புட னணுகிச் சொன்னான்:
"பேச்சிடை பிதுங்க நேர்ந்த பிசகிதைப் பெரிது பண்ணி
ஏச்சிடை யிட்டின் றென்னை எதிர்க்காதே! என்றோ வுன்கண்
வீச்சிடை விழுந்து விட்டேன் விரும்பிநா" னெனவி ரைந்து
மூச்சிடை முட்டத் தந்தான், மோகன முத்த மொன்றை!
இது தப்புக்குத் தண்டனையெனல்
"அப்பழுக் கற்ற அன்புக் கறிகுறி யாக வேநீர்
ஒப்பிலா முத்த மொன்றின் றுளங்கனிந் தளித்தீ ரேனும்,
எப்பொழு தும்தி ருப்பி யிதனைநா னீயே னுங்கள்
தப்புக்கு விதிப்ப திந்தத் தண்டனை," என்றாள் தையல்!
இயற்கை தீதி வழங்குமெனல்
"வானமே மனமி ரங்கி வழங்கிய நீரால் வாழ்ந்தும்,
மானமே யின்றி யிம்மண் மறந்தீய மறுத்த தென்றால்,
'ஈனமே நேரும் நீதிக் கெனஇருந் திலங்கும் வெய்யோன்
தானுமே வலித்து வாங்கித் தரும்விண்ணுக் கறிக!" என்றான்.