25
இன்சொலால் எனைவென்றீர் எனல்
"நிதிபோன்று நினைத்து நெஞ்சில் நிலையாக வைக்க நேரும்
இதுபோன்ற இன்சொ லால்நீர் எனைவென்றீ" ரெனச்சி ரித்து,
"விதிபோன்று விளங்கு வேன்நான், வெறுப்பினி வேண்டா" மென்றே,
மதிபோன்ற முகத்தைக் கொண்கன் மலைபோன்ற மார்பில் வைத்தாள்.
கல்யாணம் முடிப்பதுன் கடமையெனல்
"தும்பியை மலரில் சேர்க்கத் தூண்டவே வேண்டா" மென்னும்
அம்புவி வழக்குக் கிங்கோ ரையமுண் டாயிற் றென்பூங்
கொம்புநீ! மனது கொள்ளக் குறிப்பாகப் பன்னிக் கூறித்
தம்பிக்கிம் மணம்மு டிக்கும் தனிக்கடன் நினதே" என்றான்.
மாணிக்கம் மனமாற முயல்வே னெனல்
"தவமணி தனைநான் தங்கத் தம்பிக்கே மணம்செய் வித்துப்
புவிமணி யான வுங்கள் புலன்களித் திடவாய், 'அந்த
நவமணி யெனக்கு வாய்த்த நன்மணிக் கொவ்வா' ளென்றென்
செவிமணி மொழிகள் கேட்கச் செய்யவே முயல்வே!" னென்றாள்.
சத்தியன் பாராட்டல்
"மஞ்சிவர் மலைபோல் நேரும் மாபெரும் மறுக்க மேனும்,
கொஞ்சமு மஞ்சாய்; கொண்ட கொள்கையை முடிப்பாய்; கொல்லும்
நஞ்சென நலிக்க என்வாய் நழுவியே விழுந்த சொல்லை
விஞ்சிய அமிழ்த மாக்கும் விண்மணி நீதா" னென்றான்.
அலையாயுங் கடலாய்க் கற்ப தனைத்தையு மாழ்ந்து கற்றுக்
கலையாயுங் கவிஞர்க் கேனும், 'கன்னியர் கருத்தில் காணும்
நிலையாய வியலா' தென்றிந் நிலந்தனில் நெடுநாள் தொட்டுத்
தலையாய அறிஞர் சாற்றும் தமிழுக்குத் தாழ்வுண் டாமோ?