26
அண்ணி கண்ணி வைத்தல்
கொல்லையில் பசுவுக் கன்று கொழுந்தனார், கொஞ்சம் பச்சைப்
புல்லையு மெடுத்துப் போடப் போவதைப் பார்த்த பூவை,
முல்லையைப் பறிப்பாள் போன்று முன்சென்று முகம்ம லர்ந்து,
சொல்லையும் சுருக்கி மெல்லச் சுவைபட விளக்கிச் சொன்னாள்:
"பலதலை முறைக ளிவ்வில் பண்புகாத் திருந்த தன்றோ?
'நிலவுல கினிலே றைக்கோன் நிகர்ப்பவ ரில்லை' யென்றே
குலநலம் குறிப்பிட் டன்றக் குறமக ளெயினி வாயால்
நலமுறப் பாடல் பெற்ற நற்குடி நமதே யன்றோ?
"தாழ்ந்தவ ருயர எண்ணல் தவறன்று; தலைவ ரென்றே
வாழ்ந்தவர் தாழ எண்ணல் வரைபோன்ற தவறே! வாழ்வில்
வீழ்ந்தவர்க் கென்று மில்லை விடிய'லென் பார்கள்; வேராய்
ஆழ்ந்திதை நீசிந் தித்தே ஆராயா திருந்தா யன்றோ?
அருளற மமைதி யாற்றல் அறிவழ கனைத்து மாய
பொருளரும் போகம் பொங்கப் பொருந்திய வாழ்வு வேண்டின்,
'மருளறும் மங்கை யைநீ மனைவியாய்த் தேர்க' என்னும்
தெருளுறத் தெரிந்தோர் கூற்றைத் தெருவிலே எறிவார் யாரே?
அண்ணியைப் போல வேதான் அகம்புற மிரண்டு மொன்றாய்ப்
பெண்ணெனப் பிறந்தோ ரெல்லாம் பேணுவர் வாழ்வை யென்றே
எண்ணினை யாயின், நீயும் ஏற்றத்தை யிழந்தாய்! ஏற்றீங்
குண்ணுநீ ரொதுக்கிக் மைக்கும் உப்புநீர் கொண்டா ரொப்பாய்!
'தமர்பிழை நோன்றல், தாழ்ந்தோர் தம்துயர் தீர்த்தல், தாக்கும்
சமரெனின் தாங்கல், சான்றோர் சபையது வெனினும் சார்ந்து
நிமிர்ந்துட னிருத்த லின்ன நெறிமுறை யிணைந் திருந்தே
அமரராய் வாழ்த' லென்ற அருங்குடிப் பெருமை காப்பாய்!