28
பேதையைப் பேதித்தல்
பிற்பக லொருநாள் வீட்டில் பின்கட்டி லமர்ந்து, பேசும்
கற்பனைக் கவிதை நூலில் கருத்தூன்றிக் களித்த செல்வி,
சொற்புத்திக் கொவ்வா ஆற்பச் சூழ்ச்சியொன் றுதிக்கச் சொர்ணச்
சிற்பத்தை யொத்த வேணி செயல்படு மிடத்தைச் சேர்த்தாள்.
குவிந்துநீண் டடர்ந்தும், வில்லாய்க் கோணியும், திரண்டு ருண்டும்,
கவிந்தகா ரிருள்தான் கூந்தல் கவின்மிகு புருவம் கண்ணாய்ச்
சிவந்தில விதழால் முல்லை சிறையுண்ட தெனும்வா யாளை
உவதந்தவ ளாகி, "யோர்ந்தொன் றுரைக்கிறேன் வேணி!" யென்றாள்,
"அன்னையோ! என்னே நேர்ந்த அவலம்!பெண் மகவு பாவம்!
முன்னையே தந்தை மாண்டான், முந்தாநாள் தாயும் போனாள்!
பின்னையோ பேணிக் காப்பார் பிறரில்லை பேதைக்' கென்ன
உன்னைநா னழைத்து வந்திங் குரிமையாய் வளர்த்தேன் வேணி!
அன்னமூட் டியகை இக்கை! அழகாகத் தலையை வாரிப்
பின்னலை யிட்ட திக்கை! பிறையெழில் நெற்றி தன்னில்
சின்னப்பொட் டிட்ட திக்கை! சிற்றாடை யுடுத்திச் சீராய்
உன்னைத்தொட் டுவந்த கையை உளத்தில்வைத் துள்ளாய் நீயும்!
ஈன்றசே யெனவே யெண்ணி யிருந்துனைக் காக்கு மென்னை,
ஊன்றுகோ லேந்தப் போய்மூக் குடைபட்ட கதையாகக் கற்காய்ச்
சான்றவர் புகழ வொன்றிச் சமர்த்தராய் வாழ்வார்க் குள்ளே
தோன்றுமிப் பிளவுன் னாற்றான் துவங்கிற்று வேணி!" யென்றாள்.