30
பொருத்தமுமொத்ததெனல்
ஒத்தது வயதும்; தோற்றம் ஒழுக்கமு மொத்த தன்புச்
சித்தமு மொத்த பின்பிச் செல்வமொன் றொவ்வா தேனும்,
நித்தியன் வேணி காதல் நிலைத்ததென் றையம் நீங்கிப்
புத்தியி லொத்த செல்வி, 'பொருத்தமு மொத்த' தென்றாள்.
வேணி தெளிந்தெழுதல்
நேரமும் நீங்க, நீங்கா நினைவது நெருங்க, நேரில்
யாரையும் காணாள்; ஆராய்ந் தானதை யறிந்தாள்; கண்ணின்
ஈரமும் துடைத்த வாறே இடப்புறம் திரும்பத் தன்னை
யோரமா யமர்ந்து செல்வி உவந்துற்றுப் பார்ப்ப தோர்ந்தாள்.
மாணிக்கம் ஆறுதலளித்தல்
'நெஞ்சினில் நெருப்பை மூட்டி நீராக்கி விட்ட, நீங்கா
நஞ்சிதெ'ன் றஞ்சிச் சீவன் நடுங்கிய நல்லாள் தன்னைக்
குஞ்சியைத் தடவிக் கொஞ்சம் குறுநகை புரிந்த செல்வி,
"அஞ்சுதல் வேண்டா முன்றன் அகத்தினை அறிந்தேன் வேணி!
முல்லையைக் கண்டோர் மெல்ல முகரவே முயலல் போலக்
கல்லையும் கனியச் செய்யும் கலைமணங் கமமு முன்னை,
நல்லவன் நித்யன் நாடி நயந்ததில் வியப்பொன் றில்லை!
தொல்லையும் தவிர்க்ககத் தோலாத் துணையுனக் கினிநா னாவேன்.
சொல்லினா லுனது சீவன் சோருமென் பதையோ ராநான்,
கல்லினா லடிக்க வீழ்ந்த கவின்மயி லாக்கி வைத்தேன்;
நல்லதா யிற்றின் றெல்லாம்! நடைமுறை தனிலென் சொற்கள்
ஒல்லவே வுண்மை யாதல் உறுதியென் றுணர்க நீயும்!"