அறிமுகம்
அறிஞன்! எனும் சொல் ஒரு வித்து; எண் குணத்தான்! எனும் சொல் ஒரு மரம்.
வித்திவிருந்து மரம்; மரத்திலிருந்து வித்து! இது இயற்கையின் நியதி.
ஏற்கும் அளவில், இன்றியமையா எட்டுக் குணங்கள் எய்தப்பெற்றுப் பிறர் கண்காணப் பேணுபவன் அறிஞன்!
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
என்று திருக்குறள் அறிஞனை ஏற்றிப் போற்றுகிறது. எண்குணங்களாவன,
குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற
வாய்மை வாய்மடுத்து மாத்தித் தூய்மையில்
காத லின்பத்துத் தூங்கித் தீதறு
நடுவுநிலை நெடுந்தகர் வைகி வைகலும்
அழுக்கா றின்மை அவாவின் மையென
இருபெரு நிதியமும் ஒருதா மீட்டுந்
தோலா நாவின் மேலோர் பேரவை
உடனமர் இருக்கை ஒருநாள் பெறுமெனின்
பெறுகதில் லம்ம யாமே வான்முறை
தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து
நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது
நிலையழி யாக்கை வாய்ப்ப இம்
மலர்தலை யுலகத்துக் கொட்டும் பிறப்பே!
இந்தப் பைந்தமிழ் பா அறிஞன் என்பவன் இன்னின்ன குணங்கள் அமையப் பெற்றவன் எனத் தெள்ளிதின் விளக்க வல்லது:
இன்றுள்ள சூழ்நிலையில், 'அறிஞன்' எண் குணத்தான்! என வழங்கும் இவ்விரு சொற்களிலும் அற்றைதான் பொதிந்து வைத்த பொருள் வழக்கிழந்தன; அல்லது திரிந்தன எனச் செப்புதல் பொருந்தாததன்று.
எனவே புல்லறிவினனாகிய நான், தற்போது இவ்வெண் குணங்களினது இனம் விளங்கப் பாத்திரங்களை வகைப்படுத்திப் பெய்து இலக்கியமாக்கிப் பாருக்களிக்கும் விருப்பத்தாலியக்கப்பட்டு, நானூறு அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் 'அறிஞன்' எனும் இச்சிறு நூலை இயற்றி வெளியிட்டுள்ளேன். பாத்திரங்களின் பண்பு நிறைவுறச் செய்துள்ளதாகவே நினைக்கிறேன். ஆயினும் இந்நூலை ஆராய்ந்து புலவர் பெருமக்கள் தாம் காணும் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி உதவவேண்டுமெனப் பெரிதும் வேண்டுகிறேன்.
வணக்கம்
ஆக்கியோன்