பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

சக்கிலி பறைய னென்னச்‌ சாதிகள்‌ பிரித்துத்‌ தாழ்த்திச்‌
செக்கினி லெள்ளா யிட்டுச்‌ செல்வர்க ளனிவரை யாட்டி,
ஒக்கநல்‌ லெண்ணெ யாக வுழைப்பினை யுறிஞ்சிக்‌ கொண்டு
சக்கையாய்த்‌ தள்ளி, 'யெல்லாம்‌ சங்கரன்‌ செய'லென்‌ கின்றார்‌.

ஐயகோ! அருமை மக்கள்‌ அகத்தினிற்‌ புகுத்தி வைத்தார்‌;
மெய்சத விகிதம்‌ கூட மேவாத , மிடுக்கு மிக்க
பொய்யினிற்‌ புனைந்த புன்மைப்‌ புதிர்மதக்‌ கதைபூ ராவும்‌!
வையக வாழ்வில்‌, வற்றா வறூமையே வளரு மாறே.

ஈவுக்கு மிரக்கத்‌ திற்கும்‌ இடமின்‌றி, எளியோர்‌ பாட்டில்‌
நாவுக்குப்‌ பிடித்த மான நறுஞ்சுவை யுணவை யுண்டு,
சாவுக்கே வுடலைப்‌ பேணிச்‌ 'சர்வமும்‌ தனக்கே' யென்னும்‌
பாவிக்குக்‌ காப்பே மிப்பொய்ப்‌ பகவான்தா" னென்றான்‌, நித்யன்‌.

மாமனும்‌ மருமகனும்‌


'முகிலின்‌றி வானில்‌ பொற்பூ முழுவதும்‌ முகிழ்த்த' தென்னப்‌
'பகலன்‌றி யிரவன்‌' றென்னப்‌ பனிமதி நிலவு பண்ணப்‌
புகலின்று தான்தா னென்னப்‌ போந்துள்ள மாமா, சத்யன்‌
மிகலின்றி யமர்ந்தி ருந்தார்‌ மேன்‌மாடித்‌ தாழ்வாரத்தே.

வரப்போடும்‌ வாய்க்கா லோடும்‌ வயல்‌,பயிர்‌, வாழை, தென்னைப்‌
பரப்போடும்‌ தன்வாழ்‌ நாளைப்‌ பங்கிட்டுக்‌ கழிப்பான்‌ வந்து,
சிரிப்போடு பார்த்த மாமன்‌ சிந்தையும்‌ சிறுக்க நின்று,
விருப்போடு பேசி வீடு, வினை,நலம்‌ விளங்கக்‌ கேட்டான்‌.

"அமர்கஇங்‌ கப்பா!" என்றே அன்பொடு பணிக்க அண்ணன்‌,
சமர்புரி வதற்கென்‌ றிட்ட சமிக்கையென்‌ றமரத்‌ தம்பி,
நிமிர்ந்தவா றிருந்த மாமா நினைவைநேர்‌ செய்து கொண்டு,
திமிர்மிகுங்‌ குரலைக்‌ கொஞ்சம்‌ திருத்திப்பின்‌ செப்ப லானார்‌: