45
"செம்பரி திக்கோன் பூத்துச் சிறுகாலை செய்யுங் கால்,பூங்
கொம்புகாள்! குயில்காள்! மான்காள்! குலமயில், கிளிகாள்! கூடிக்
கம்பரி கத்தி கூடை கையுடன் கொண்டு வாரீர்!
நம்பெருங் குளத்துக் காட்டில் நல்விளை வறுக்க," வென்றே.
சீரழிந்த சேரி வாழ்க்கை
ஓடுவே யாத கூரை; ஒன்றிலொன் றொட்டும் குச்சில்,
ஈடுவே றில்லார்; கஞ்சிக் கில்லாரா யிளைத்துப் பெண்கள்
வாடுவா ரெனினும், வாஞ்சை வளர்த்தும்வாய் துடிக்க வந்து
கூடுவோ ரானார், நித்யன் கூறிய தோர்ந்து கேட்டே!
அறிவான அழைப்புக்கு அன்பான பதில்
"மானெங்கே? மயிலு மெங்கே? மகிளிர்தா முள்ளோ மிங்கே!
தேனங்கே! தினைமா வங்கே! தின்னவும்! தேரின், தேவன்
தானிங்கே நீரும்! தங்கள் தயவுக்குக் காத்தோம்! தங்காக்
கானங்கே! யிதுவூர்; வாரீர் களியுண்டு செல்வீர்," என்றார்.
கூறிய குறிப்புக் கொப்பக் குறுநகை புரிந்த நித்யன் ,
மாறியம் பிடுமுன், மற்றோர் மங்கைமுன் வந்து ரைத்தாள்:
"ஆறிய கனியோ, கூழோ, அழகியவ் வேணி யன்றி,
வேறியா ரிடினு முண்ணா வேளிவர் காணீ" ரென்றே.
நித்தியனின் நேரான பதில்
"ஆலையிற் கரும்பா யாக்கி யரைக்காதீ ரென்னை யிங்கே
கேலியும் கிண்ட லும்தாம் கிளப்புதற் கிதுபோதன்று!
வேலையில் விருப்பம் வைத்து வேளைவீண் செய்தி டாமல்
காலையில் வந்து சேர்வீர் காட்டுக்!"கென் றுரைத்தான் நித்யன்.
ஆரியக் கூத்தே யாகி யாடினு மணுகா மல்தன்
காரிய மதுகண் ணாகக் கருதுவோன், கால மோர்ந்தச்
சரியை விட்டுச் சீராய்ச் சிந்தித்த வாறு சென்றான்,
பாரினிற் படியா ரான பாமரர் பாங்கைப் பார்த்தே!