50
மயிலொன்றைப் பெற்ற மாமா குயிலொன்று பெறவில்லையெனல்
"கயலொன்றுங் கண்கள்; கட்டிக் கரும்பொன்றுஞ் சொற்கள்; காணும்
புயலொன்றுங் கூந்தல்; பூத்த பூவோன்றும் மேனி; போற்றும்
மயிலொன்றை மட்டும் பெற்ற மாமனே, தனக்கும் மற்றோர்
குயிலொன்றைப் பெற்றீ யாத கோபந்தா னவனுக்" கென்றான்.
மாணிக்கம் மனக்குறை கூறல்
"வண்டிதான் வேண்டும் உங்கள் வார்த்தையை வைத்தி ழுக்க!
சிண்டுகள் முடிந்து விட்டுச் சிரிப்புடன் பார்த்து வந்து,
கிண்டலும் புரிகின் றீர்நீர்! கெட்டதோர் கேட்டுக் கிங்கே
சண்டைக்குக் களத்தைக் கோலிச் சரிபார்க்கின் றீரா மேலும்?
துப்பாக அழைத்துச் சென்று துறைபோகப் படிக்க வைத்தின்
றொப்பாக வொருவ ரில்லா துங்களை யுயர்த்தி யூக்கும்
அப்பாவை யெதிர்த்துப் பேசும் அதிகார மசட்டுத் தம்பிக்
கெப்போது தந்தீர்? இங்கே எதற்காக வரவ ழைத்தீர்?
துரவொடு கழனி தோப்புத் தொழிலதைத் தம்பி பார்க்க,
வரவொடு செலவை யுங்கள் வசமாக்கி, வைய கத்திற்
கிரவொடு பகல்க ளெல்லா மிதயத்தி லெழுதிப் பேசிப்
பரவிட வைப்போர்க் கிங்கே பண்ணுதல் மான பங்கம்!
முத்தெல்லாம் பிறருக் கேனும் முதிரவே வைத்துக் காக்கும்
நத்தல்லா தொப்பொன் றில்லா நல்லவர்! நாடிச் சேர்க்கும்
சொத்தெல்லா மென்மேல் வைத்துச் சகமெல்லா முமக்குத் தந்து,
சித்தெல்லா மாவோ ருக்கேன் செய்கிறீர் சிறுமை?” யென்றான்.