57
காடெலா மவர்கள் கண்ணீர்; களமெலா முங்கட் குண்ணீர்!
பாடெலா மவர்கள் கையில்; பணமெலா முங்கள் பையில்!
சூடெலா மவர்கள் பங்கு; சுகமெலா முங்கட் கிங்கு!
நாடெலாம் நரக வாசம்; நயமெலாம் செய்தீர் நாசம்!
அழுத்திட வேலை வாங்கி, அழுதிடக் கூலி யீந்து,
பழுத்திடும் பழங்கள், பால்,நெய்ப் பலகாரம் பலவும் பண்ணிக்
கொழுத்திடத் தின்று, மீந்தால் குப்பையிற் கொட்டி மூடிப்
பிழைத்திடல் செய்வீர், கற்றோர் பேருண்மை பிறழு மாறே!
விருப்பாக இருக்கும் நீங்கள் வேம்பாக மாறி வேக
நெருப்பாகி எரித்தீ ராயின், நீராகிக் கொதிப்பர்! ஆனால்,
பருப்பாகக் கடைய மாட்டீர்: பதமாக அவர்கள் வேகார்!
சிரிப்பாக விருக்கு முங்கள் சீரழி வினிமே" லென்றான்.
"வறுத்தினிக் கொட்டா தேநீ வாய்த்துடுக் காக வாரி;
நிறுத்திந்த விடத்தில்! நாளை நிகழ்வதோ ராத நீசா!
மறுத்திதற் கெல்லாம் கூற மறுமொழி யுண்டு நூறு!
குதித்தது கூறும் முன்பே குறுக்கிட்டுக் கொள்வாய் நீயும்!
கடுமையைக் கண்ணில் காட்டிக் கசப்பினைக் காதில் கூட்டக்
'கொடுமையைச் செய்தீ' ரென்று குரைக்கின்ற குட்டி நாயே!
மடிமையை மனத்தில் மூட்டி மதிகெட்ட மனிதர் தம்மை,
‘அடிமையா யிருக்க வா’வென் றழைத்தவர் தான்யா" ரென்றார்.
அறிவுள்ள ஐயா! நாங்கள் அனைவரும் ஆடு மாடே!
செறிவுள்ள வனத்தில் சிக்கிச் சீரழி கின்றோம்! சேர்ந்து
தறவுள்ள தழையும், புல்லும் பெற்றுத்தின் றடிமை யாகி
வுள்ளி வுழைப்போ' மென்றே ஓடிவந் தனரா?" வென்றான்.