58
"அரிக்குட்டி யன்றோ நீயும்; அறிவறித் தடங்காய்! ஆமாம்!
இருக்கட்டு மிவைய னைத்தும் இவ்வாறா யின்று; நாளைச்
சரிக்கட்டி விடுவே னுன்னை! சரி” யென வெழுந்து மாமா
எரிக்கட்டி யெனக்கண் காட்டி ஏகினா ருமிழ்ந்து காறி!
மாமா போனதும் மருகன் செய்ததும்
வீட்டினை நோக்கி நெஞ்சில் வேதனை தேக்கிக் கொண்டு
காட்டினைக் கடந்து போனார் கனலாகி மாமா! கண்ட
ஆட்டினை யடித்தார், 'ஆ'வென் றலறவே; யடுத்து வந்த
மாட்டினை யடித்தார், "முட்டாள் மாடெ'ன மனங்கோளணுதே,
கந்தலைக் கட்டிக் கொண்டு, காட்டிலே வேலை செய்யும்
தந்தைக்குக் கஞ்சி காய்ச்சித் தலைமீதில் வைத்த வாறே
சிந்தனை யோடும் வந்த சிறுமியை யடித்தார் சீறி,
'ஒந்தினி விலகித் தூரம் ஓடிப்போ நாயே', என்றே
கழிதட்டைச் சுமையாய்க் கட்டிக் கருத்துடன் தலைமேல் வைத்து,
விழிதட்டிப் போன, முற்றும் விருத்தனோ ரேழை, பாவம்!
வழிதட்டி முட்டிக் கொண்டு வந்தவன் கன்னம் வீங்கப்
பழிதட்டு மாற டித்தார் பலமாக இடது கையால்!
வேள்வியோ, விழாவோ செய்து வீடுபே றடைவ தன்றிக்
கேள்வியோ, முறையோ செய்தல் கிராமத்து வழக்கா றன்றே!
தாழ்வையோ சித்துச் சற்றுத் தலைதூக்கி நின்றால் தாழ்ந்தோர்,
வாழ்வையே வேரை வெட்டி வைப்பார்கள் காயு மாறே!
நித்யனின் நேர்வழி
கற்றவர்க் கொருவாய்; கல்லாக் கயவருக் கொருவாய்; காசோ
டுற்றவர்க் கொருவாய்; ஓயா துழைப்பவர்க் கொருவா யூரில்
மற்றவர்க் கொருவாய், மாற்றி மலர்ந்திடும் மாமா, மான
மற்றவ ரெனவே அன்றங் கறிஞனு மறிந்து கொண்டான்.