“அறிஞன்”
முகப்பு வீடு
பாரினில் பார்ப்போ ரெல்லாம் பரவச மெய்தப் பாங்காய்
நீரினில் கமழப் பூத்த நிகரிலாக் கமல மென்னச்
சீரினில் திகழ்ந்து செல்லாச் செல்வமும் செழிக்க வாழ்வோர்
ஊரினில் புகின்நாம் காண்போம், உத்தமர்உறையுள் முன்னே!
மச்செனும் கார ணத்தால் மதிப்பது மடமை யேனும்
குச்சினில் உறைவோர் கூறும் குறைகளை அறவே நீக்கும்;
நச்சினை அகற்றி ஊரின் நலிவினைக் களையும்; நல்லோர்
மெச்சுவ ரதையெ னின்,நாம் மெச்சுதல் கடமை யன்றோ?
வேணியின் பகல்தூக்கம்
குயிலவள் செவிக்குப் பூத்த கொம்பினில் குந்தும் கோல
மயிலவள் விழிக்கு! மாண்பால் மக்கள்நெற் பயிர்தா மாயின்
வயலவள்! வாழ்வில் வாட்டும் வரையிலாப் பனிதா னென்றால்,
வெயிலவள் செயலில்! வீட்டில், விடிவெள்ளி யவள்தான் வேணி!
இகலறும் இயல்பில் வேலை என்பன இலங்கச் செய்தாள்,
துகிலரும் பட்டா யன்றத் தோகைதேர்ந் தணிந்த வாறாய்ப்
புகலரும் புலனில் நுட்பம் பொருந்திநன் கிருந்தும் போகாப்
பகலொரு பொழுது நேற்று படித்தநூல் முடிக்கப் பார்த்தாள்.
கூடத்தில் ஊஞ்ச லின்மேல் குடிமக ளெனவே குந்தி,
ஏடதில் இதயம் வைத்தாங் கிருந்தவள் மறந்தாள் மெய்யை!
மூடிற்று விழியை மூண்ட மோகனத் துயில்!முந் தானை
ஆடையும் விலகப் பூங்கொம் பசையாது கிடந்த தொத்தாள்!