62
திருநீறு பூசிக் கொண்டும், திருமண்ணைச் சாத்திக் கொண்டும்,
தெருநாறும் வேசம் பூண்டு தீனர்திக் கற்றரோ ராயின்
றொருநூறு லட்சம் மக்கள் ஊர்தொறு மிரந்து சாகக்
கருநூறிச் சேர்த்த காசு கற்றறிந் தோர்க்கு நஞ்சாம்!
கல்லானை கரும்பு தின்ற கதைநம்பி வாழும் நாட்டில்,
இல்லானை யிருப்போ னாக்கற் கெண்ணுத லிதுவும் குற்றம்,
பொல்லானை நல்லோ னாக்கப் போதித்த லதுவும் குற்றம்;
கொல்லானைக் கொல்வோ னாக்கிக் கோடலே தருமம் போலும்!
வாழ்வாங்கு வாழா வையகமிஃதெனல்
திருவாட்டி யெனினும், தேடித் தெருத்தெரு வாகச் சுற்றிக்
கருவாட்டை விற்ற காசில் கழுவிடும் வயிற்ற ளேனும்,
ஒருவீட்டி லுதித்த மக்கட் குணவிடு மன்னை யொப்ப,
வரவூட்டி வாழா நாட்டில் வாழ்க்கையே நரக மன்றோ?
நெய்வதை யறிந்தோர் நெய்தால் நேர்த்திதான்! கொலையை யும்நீர்
செய்வதை யறிந்தி ருந்தால் செய்யலா மிங்கே யே!சேர்ந்
'துய்வதை யறியா ரோடிங் குறைவதை விடவு முற்று
மெய்வதை யடைதல் மெத்த மே'லென்பர் மேலோ" ரென்றான்.
மாமாவின் மத நம்பிக்கை
"முன்னோர்கள் மூட ராகி, முளைத்திடு மரும்பு மீசைப்
பின்னோர்கள் பெரிதும் போற்றப் பேசிடும் பெரியோ ராயின்,
பொன்னாகி மதிக்கப் பெற்றுப் பூவாகிப் பொலிந்து வாழ்வு
பன்னீரு மத்த ராகிப் பரிமளங் கமழும் போலும்!
'நனிநல்ல தர்மம்,- நாட்டில் நடைபெறு கின்ற தர்மம்
மனுதர்ம மிதனை யிந்த மாநிலம் மறக்கு மாயின்,
சனிதர்மம் தழைத்து நம்மைச் சர்வாங்கம் நாசம் பண்ணும்!'
எனும்தர்ம வான்கள் சொல்லுக் கினிவிலை யில்லை போலும்!