65
ஒழுக்கமில் லாதான், ஊரா ருழைப்பினை யுறிஞ்சி வாழும்
இழுக்கினை மறைக்க வன்றோ இறைவனை யிழுக்கின் றானிவ்
வழக்கினை வளர்ப்பீ ராய்நீர் வடிக்கின்றீர் மனுதர் மத்தைப்
பழக்கத்தி னாலே, பண்ணும் பழிபாவம் பகுத்தோ ராதே!
விதந்திருள் விலக்கும் வெள்ளி விளங்காது முகில்சூழ்ந் தென்னச்
சுதந்திர மென்னும் சொல்லின் சுடரொளி துலங்கா வாறாய்ப்
பதந்திரு பாழ்ப்ப டுத்தும் பரமதை மதுவாய்ப் பண்ணி
'இதந்தரும் பக்தி' யென்றே யிருள்நீங்கா தருந்தச் செய்வீர்!
'இனிதுதர் மத்தைப் பற்றி யெண்ணியே யியற்ற' லென்பீர்!
தனதுதர் மம்த னத்தைத் தகவின்றிச் சுருட்டிக் கொள்ளல்;
மனிததர் மத்தைக் கொன்று மண்ணிற்குள் மறைத்தல்; மாயப்
புனிததர் மத்தைப் போற்றிப் புரியாது புலம்பல் போலும்!
'வெண்மையைக் கருமை யென்று விளக்கலாம்; விவரித் தின்று,
திண்மையை மென்மை யென்று தெளிவித்து விடலாம்; தேரப்
பெண்மையை யாண்மை யென்று பேசிவென் றிடலாம்; ஆனால்,
உண்மையைப் பொய்மை யாக்கற் கொருகாலு மொண்ணா' தென்பர்.
உண்மையே உலகும் வானும்: உண்மையே வுயிரும் வாழ்வும்;
உண்மையே கல்வி கேள்வி; உண்மையே வுடைமை யூட்டம்;
உண்மையே வுளத்துக் குள்ள உறுதுணை! யூன்றிப் பாரீர்;
உண்மையைச் சுட்டு மென்றே உமிழ்ந்தீர்க ளுயர்வோன் ராதோ!