6
நித்தியன் திடீர் வருகை
நிலையின்ன வாறென் றோரா நித்தியன் நேராய் வந்தோன்,
கலையின்ன வாறு நீங்கக் கண்துயில் கவினைக் கண்டான்.
அலையென்ன ஆவல், வெட்கம் அகத்தினை அலைக்க அங்கே
சிலையென்ன நின்றான், சிந்தை செயல்திறம் தீர்ந்தோ னாகி!
பிடிபடு மிடையும், மூன்றாம் பிறைபடு நுதலும், பேதை
மடுபடு குவளைக் கண்தா மரையிமை மறைக்கக் கச்சு
முடிபடுங் கனகக் கொங்கை மோகனம் புரிய, மூடாத்
தொடிபடுங் கையும் மெய்யும் துளைத்துடை பட்டான் நெஞ்சம்!
நித்தியன் நெறிமுறை
பத்தரை மாற்றுப் பைம்பொன் பண்ணையின் சொந்தக் காரி
உத்தமி மதனி உள்ளம் உவந்திட ஓய்வில் லாமல்,
ஒத்துழைக் காதோர் கூட உளம்மாறி ஒத்து ழைக்க
நித்தியன் பம்ப ரம்போல் நிலங்களில் சுழலா நிற்பான்!
பிணமாக நேர்ந்த போதும் பேர்கெட ஒப்பா மானி,
குணமாகக் கூறி நாளும் குறையாது வேலை வாங்கிப்
பணமாகத் திரட்டி வாழ்வில் பயன்படச் செய்வோ னுக்கு,
மணமாக வில்லை இன்னும் மனமொத்த பெண்வாய்க் காமல்!
ஆணினை அடிமை கொள்ளும் அழகினை இயல்பாய்ப் பெற்ற
வேணியின் நினைவால் செய்யும் வேலையை மறந்தான்: வேண்டும்
ஊணினை மறந்தான்; ஓய்ந்தும் உறக்கத்தை மறந்தான்; ஓம்பும்
காணியை மறந்தான்: கண்ட காட்சியை மறவா னாகி!
நீடித்து நிலைத்த தேயோ நேரிழை நினைவு! நித்யன்
வாடித்தன் அறையி லேயே வசங்கெட்டுக் கிடந்தான்; வாய்க்கத்
'தேடித்தா னலைய வேண்டாத் தித்திக்கும் அமிழ்தன் னாளைக்
கூடித்தான் களித்தா லன்றிக் குணமுறா திந்நோ' யென்றே.