70
மாணிக்கம் தந்தையின் மன இருள் மறையக் கூறல்
போதெனப் பொலிந்த கண்ணில், 'பொலபொல' வெனநீர் சிந்தி,
மாதரில் மணியும், தந்தை மனஇருள் மறையு மாறே,
"காதினித் தூர்க' வென்று கழறாதீ ரப்பா! 'கண்டித்
தீதுகள் தீர்க்க' வென்றத் தெய்வத்தை யழைப்பீ" ரென்றாள்.
இடக்கு செய்த அப்பா மடக்கப்பட்டார்
"காலமே காலம்! காத்திக் காலத்தில் கற்றுக் கொண்ட
கோலமே கோல மாயின் குறுக்கினி நிற்பே னல்லேன்;
ஞாலமே ஏற்றுக் கொண்டு நடக்கமுற் படுங்கால் நானும்
ஆலமே யெனினு மாரா அமுதாகக் கொள்வே னன்றே!
செப்பிய என்சொல் சேரச் சிந்தித்துத் தெளிந்த தன்றேல்,
துப்பிய தாகத் தொன்று தொட்டுநான் தொடர்ந்த வாழ்வும்!
தப்பிய தனைத்தை யும்தாம் தயவுசெய் தொதுக்கித் தள்ளி,
ஒப்பிய படியே வொன்றி வொழுகுக! நீவி" ரென்றார்.
வேணியின் விரகம்
புதுப்புது வடிவாய்ப் பூத்துப் பொலிந்திடும் போது மாகி,
மதிப்பதற் குரிய வண்ண மணங்கமழ் மலரு மாகி,
விதிப்படி கோத்துச் சூட விரும்பிடும் மாலை யானாள்,
உதிப்பது பருவ மாகி உளம்பூங்கா வான வேணி!
மானுமாய் மயக்கும் கண்ணை! மல்குபூங் குறிஞ்சிக் கோட்டின்
தேனுமாய்த் திளைக்கும் வாயை! தெவிட்டாது கமழும் முல்லை
தானுமாய்த் தழுவும் மூக்கை! தன்மய மாக்கும் யாழின்
கானமாய்க் கவரும் காதை கன்னியின் கன்னிக் காதல்!