71
எண்ணத்துப் பாலில் காதல் எனுமுறை யிட்ட தாலே,
வண்ணத்தில் வேறா காமல் வடிவத்தில் தயிராய் வாய்த்துக்
கண்ணொத்த மத்தாய் நித்யன் கலந்திடும் கணத்தைக் காணாள்,
பெண்ணொத்த வாழ்வில் வெண்ணெய்ப் பேரின்பப் பேறெய் தற்கே!
'காதல்கை கூடும்! கூடா தாயின்பின் காத்த வீட்டில்
மோதல்கை கூடும்; கூட முன்னும்பின் னறியாற் கென்னை
யீதல்கை கூடும்! கூடின் இதயமும் வெடிக்க வெந்து
சாதல்கை கூடும்! கூடச் சகம்கதை கட்டக் கூடும்!...
திடுக்கிட்டுப் பார்ப்பாள்; 'அந்தோ! தெய்வமே! துணைநீ,' யென்பாள்.
படிக்கட்டி லேறற் கேங்கும் பச்சிளங் குழந்தை போன்று,
நடுக்கிட்டு நலிவாள்; ஆமாம், நடக்கட்டும் நடப்ப தெல்லாம்;
முடிக்கட்டும் தொடங்கி னோரே முதல்கதை யெனக்கென் னென்பாள்.
"கதிரினை மறைத்தார்; காயக் கவின்மதி யெரித்தார்; காண
எதிரினி லிருந்தா ரின்னே இதயத்திற் புகுந்தா ரஞ்சிச்
சிதறினும் வீழார் போலும், சீவனில் கலந்தார் போலும்,
புதிரெனத் தோன்றற் கிஃதோர் புதுக்கங்குல் பொழுதே போலும்!
சென்றநா ளெல்லா மென்றன் சிந்தையில் சிறக்க வொன்றி
'நன்றிவை' யென்று நம்பி நவின்றவை நலிக்கு மந்தோ!
தென்றலும் நன்றா யன்றித் திங்களும் நன்றா யன்றிவ்
வன்றிலும் நன்றா யின்றே னனலாயிற் றென்றா' யென்றாள்.
'முக்காலுங் காலுங் கூடி முழுமையாய் விழியும் மூடிச்
சொக்காமல் சொக்க வைத்துச் சுகமாக மெய்ம்ம றந்து,-
அக்காவந் தெழுப்பி னாலும் 'ஆ'வென லறியாத் தூக்கம்,
எக்கேடு கெட்டோ இன்றிங் கென்னைவிட் டேகிற்' றென்றாள்.