73
"மானாகி மருள்வாய்! மாறி மயிலாகி யருள்வாய்! மங்கா
மீனாகி மிளிர்வாய்! மீண்டு மின்னாகி மறைவாய்! மேலே
வானாகி வெளிறு வாங்கி வைகறை வளர்த்த வாய்த்துத்
தேனாகி யினித்த தூக்கம் தெவிட்டாது தீர்த்தா" யென்றான்.
வேணியின் விவரிப்பு
"நறியவாம் காற்று மேவ, ஞாயிற்றுப் புத்தேள் கீழ்வான்
பொறியவாம் புதுமை மேவப் பொன்வண்டு பூவை மேவ,
வெறியவாம் துயிலை மேவி, விடிவையோ ராதி ருக்கும்
சிறியவாம் செய்தி பெற்றுச் செல்லநான் தீர்த்தே" னென்றாள்.
வைகறைத் தூக்கம் வதுவுக்காகா தெனல்
"இதவுக்குப் பேசும் பேச்சிங் கியல்புக்கேற் காதென் றோராய்!
மதுவுக்கு மதிகம் மல்கி மயக்கிடும் விடியல் தூக்கம்
வதுவுக்கும் வந்தால், வாதாய் வரன்வாயை வளர்த்தி வாழ்வைக்
கதவுக்குத் தாழ்போ டாத கதையாக்கித் தீரு" மென்றான்.
"விண்ணுக்குள் ளிருந்து வந்த வீரரு மாண்க ளன்று;
மண்ணுக்குள் ளிருந்து வந்த மடச்சியர் மாத ரன்று!
பெண்ணுக்கு மாணுக் கும்நீர் பேதங்கற் பிப்பீ ராயின்
புண்ணுக்கு மருந்தா காது புரையோடப் புரிந்தோ ராவீர்!
எண்ணினை யிழிவு செய்த எழுத்திருந் தென்ன செய்ய?
பண்ணினை யிழிவு செய்த பாட்டிருந் தென்ன செய்ய?
பெண்ணினை யிழிவு செய்து பேசிடு மாணின் வாழ்வு,
கண்ணினை யிழிவு மெய்த கதையாகிக் கழியு" மென்றாள்.