7
நீங்காத நினைவால் நித்தியன் வருந்தல்
'மண்ணினால் செய்த பாண்ட மன்றுநான் மனிதன்; மற்றும்
எண்ணினால் இளைஞன்; காலம் இளவேனில்; இணைதற் கேற்ற
பெண்ணினால் உறுநோய்க் கந்தப் பெண்மையே மருந்தாம்! என்ன
பண்ணினால் படைப்பாள் இந்தப் பைங்கிளி! எனப்ப தைத்தான்!
அறிவதை அலசி ஆய்ந்தே அறிந்தவன்; அகிலத் தின்மேல்
பெறுவதைப் பெரிதும் பேணப் பெற்றவன்; பிழைக்கின், பின்னால்
உறுவதை ஊன்றித் தீர யோசித்துப் பார்த்து விட்டு,
'மறுவிதி யில்லை; நாளை மணந்திடின் பொருந்து' மென்பான்.
'மழையற்ற போதே யிந்த மாநிலம் மாண்பற் றுப்போம்;
தழையற்ற போதே தாழாத் தாவரம் தரமற் றுப்போம்;
இழையற்ற போதே ஆடை எழிலற்றுப் போம்தான்! ஆனால்,
பிழையற்ற போதே மாந்தர் பேரெழில் பெற்றார்' என்பான்.
காதலின் இயல்புணர்தல்
நாள்கொள்ள நேரும் நாணம், நயம், நலம், நட்பொ ழுக்கம்
ஆள்கொள்ளு மெழிலால் நேரும் ஆவலும் அன்பும்! ஆண்பெண்
தோள்கொள்ள நேரும்! இன்பத் தொகைநேரும்! தோற்பின் வெற்றி
வேள்கொள்ள நேரும்! மோகம் வெறிகொள்ள நேரும் நெஞ்சில்!
புலரியில் விழித்து மேனி புதுக்கிய எழில்,பொன் பூத்த
மலரியல் விருந்த ருந்தி, மதலையர் முகத்து லாவிப்
பலரியல் புலவர் பாவில் பகலர சோச்சி, மாலை
அலரியல் மாத ரங்க அரங்கனி லுறங்கு மென்பான்!