பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



ஏழை மக்கள், இதயம் குளிர பாராட்டுவதைக் கண்டோம்!

மாடி வீடுகளிலே நின்ற மக்கள், மாலைகளை வீசியதை மனமாரக் கண்டோம்!

குடில் மன்னர்கள், குதூகலத்தால் பூப்பாவாடை விரித்ததைப் பூரித்துப் பார்த்தோம்!

தொண்டர்கள், தங்கள் தேரோடும் வீதிகளிலே எல்லாம் மண்ணாகிக் கிடந்தார்கள்! ஏன்?

உயிர் எமக்கு பெரிதல்ல; அண்ணன் அன்புதான் பெரிதென்று:

அதனைப் பெற உயிரையும் விலையாகத் தருவோம் என்ற ஆர்வமேலிட்டால் காட்சியளித்தனர்.

எமது இதயவீணையை மீட்டி ஏழிசைப் பாடி வந்தோம் - ஊர்வலத்திலே!

நரம்புகள் எழுப்பிய நாதமாக, நடை பாட்டு இசைத்து வந்தோம்!

இதற்கெலாம் காரணம் என்ன? எங்கள் இலட்சியமே அறிஞர் அண்ணாதான்!

எங்கள் வாழ்வும் வளமும், அறிஞர் அண்ணாவே என்ற எண்னம் தான்!

இதைவிட யாம் பெறும்பேறு; இப்பிறவியில் இல்லை என்பதை உணர்ந்த காரணத்தால்தான் அண்ணா!

கடிக்க நனி சொட்டும் கரும்பு!
மோப்ப மணக்கின்ற மலர்!
கேட்கப் பரவி வரும் இசை!
நோக்கம் எழிலீயும் காட்சி!
உணர சுகந்தரும் தென்னல்!
எண்ண எண்ண இனிமை தரும் அறிவு!