பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



பரந்த மணல்வெளி, ஆற்றின் படுக்கையாக இருந்தது.

எல்லையற்ற பெரும்பயணத்திற்கு அது இயற்கையாகவே போடப்பட்ட பாதையாகவே விளங்கியது.

தொடுவானம் அந்த வரண்ட ஆற்றைப் பரிதாபமாகப் பார்க்கிறது.

மணலே, அருவியாக ஒடி வானத்தில் கலப்பதைப் போலத் தோன்றுகிறது.

நிலம் - நீராக மாறுகின்ற விசித்திரக் காட்சியை, இந்த இடத்திலேதான் பார்க்க முடியும்.

இதற்குப் பெயர் திணைமயக்கமாகும்!

வறண்டு போனவர்கள் - வதங்கிப் போனவர்கள் - சுரண்டப் பட்டவர்கள் - சுருங்கிப் போனவர்கள் - இருண்டவர்கள் - எழுந்திருக்க முடியாதவர்கள் - மிரண்டவர்கள் அனைவரையும் துன்பம் தின்றுவிட்டக் காரணத்தால், மீதியானவர்கள் எல்லாம், திணை மயக்கத்தால் தெரிகின்ற ஆற்றைப் போல தொடுவானை நோக்கி ஓடுகிறார்கள்.

அந்த தொடுவானம் தான் அறிஞர் அண்ணா.

உயர்ந்த மலை மீதிருந்து தொடுவானத்தைப் பார்த்தால் ஒரு பொட்டலத்தை துணியில் சுருட்டி வைத்ததுபோல், மலை உள்ளேயும் - தொடுவானம் கீழேயும் சுருண்டிருக்கும்.

அண்ணாவும் பெரிய மனிதர்களைத் தன்னுள்ளே சுருட்டிக் கொண்டவர்.

வெட்ட வெளியில், ஒரே ஒரு மலையிருந்து, அப்போது ஒரு வானவில் வந்திருக்குமானால், அந்த மலை ஒரு துலத்தில் கட்டப்பட்ட மணியைப் போலத் தொங்கும்.

அண்ணாவும் தன்னுடைய வானவில் சொல்லால் பெரிய மலைகளைத் தொங்க விட்டவர்.