பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

97



அந்த உருவத்தின் முழுமையும் எனக்குத் தென்படாவிட்டாலும் - ஒரு வெண்மையானப் புள்ளி, நிலப்பரப்பை நோக்கி வருவதை என்னால் உணர முடிகிறது.

நான் இருக்கின்ற பிரதேசத்தில் மின்னல் இல்லை விண்மீன்களது ஒளியில்லை - எங்கும் இருள் மயம்!

இப்போது நிலம் நோக்கி வருகின்ற உருவத்திற்கு நீண்டு விரித்த சிறகுகள் இருந்தன.

அதனுடை இறக்கைகள், பகுத்தறிந்த அறிஞன் ஒருவன் வாழ்க்கையில், வாழயியலாத மக்களுக்கு அறிவுரைக் கூறிவிட்டு வாழ்த்தும்போது இருக்கின்ற கை அசைவைப் போல் அதனுடைய இறக்கைகள் மென்மையாக ஆடிக் கொண்டிருந்தன. அந்தப் பறவை, வான சாம்ராச்சியத்தின் தூதுவனாகவே இருந்தது:

இரக்கப்பட்டு அருள் வழங்கும் ஒருவனின் தூய்மையான உள்ளமும் அதன் உடல் நிறமும் ஒன்றாக இருந்தது.

வைரத்தின் ஒளியும் - பொன்னின் கதிர்த் தெறிப்பும் அதன் கண்ணிலே ஒளிர்ந்து கொண்டிருந்தன!

இப்போது அந்தப் பறவையை என்னால் சரியாகக் காணமுடியும்.

செதில் செதிலாக அணிவகுத்து எழில் பரப்பிக் கொண்டிருக்கும் இறகுகள் - அதன் சிறகுகள் மீது படர்ந்திருந்தன.

உடனே எனக்கு தலை கிறுகிறுத்தது. ஏனென்றால், அந்தப் பறவையைச் சுற்றியிருக்கும் பிழம்பொளி என் கண்மணியைக் கூசவைத்தது.

தங்கமே எரிந்து பூவானம் பூவானமாகிக் கொட்டுகின்ற பூவெல்லாம், நவரத்தின வண்ணத்தோடு சிதறுமானால் - தாங்க முடியாத அவ்வொளி வெள்ளத்தை, எந்தக் கண்ணாலும் ஆட்கொள்ள முடியாதல்லவா?

இப்போது நான் இந்த நிகழ்ச்சியின் விளைவால், கீழ்நோக்கித் தள்ளப்பட்டு விட்டேன்.