பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

குடும்பம் எவ்வளவு வறுமையுற்றிருந்தாலும் பெற்றோர் யாரும் பிள்ளைகளை விற்க முன்வர மாட்டார்கள். பிள்ளையை இரவலாகக் கொடுத்தால், கொடுத்தவன் கொடுத்த பொருளை எந்த நேரமும் திரும்பக் கேட்டுப் பெறும் உரிமை அவனுக்கு உள்ளது. 'விற்ற பொருளுக்கு விலையில்லை' என்பது ஒரு சொல்லடை. அதாவது, பொருளை விற்றவன் அந்தப் பொருளின் மீது, மீண்டும் விலைக்கு வாங்கும் உரிமையினையும் இழந்துவிடுகின்றான். எனவே, பிள்ளையைக் கொடுத்தவன் திரும்பக் கேட்காமல் இருக்கவேண்டுமென்றால் அதனை அவன் விற்றே ஆக வேண்டும். இது சமூகத்தில் எழுந்த உணர்வு ரீதியான ஒரு பண்பாட்டு நெருக்கடியாகும். இதற்குத் தீர்வு காணும் முறையில்தான் ஒரு கைப்பிடி அளவு தவிட்டை விலையாகப் பெற்றுக்கொண்டு குழந்தையை விற்றதுபோலப் பாவனை செய்திருக்கிறார்கள்.

ஒரு கைப்பிடி தவிடு என்பது மிக அற்பமான பொருளாதார மதிப்பினை உடையது. அது ஒரு மூலப்பொருள் அன்று. மூலப்பொருளாகிய நெல்லிலிருந்து கழிக்கப்பட்ட, மனிதன் உண்ணாத பொருளாகும். உப்பு, வெற்றிலை போன்ற பொருள்கள் தொல் பழைய நம்பிக்கை சார்ந்த பொருள்கள். உப்பு நன்றியுணர்வைப் புலப்படுத்தும் அடையாளம். இது போன்ற தொல் பழைய நம்பிக்கை எதுவும் தவிட்டின்மீது சாரவில்லை. எனவே தவிடு குழந்தைக்கான பண்ட மாற்றுப் பொருளாகக் கருதப்படுகிறது.

தவிட்டுக்குப் பிள்ளை கொடுத்தவர்கள் தங்கள் பொருளாசையால் பிள்ளையினை விற்கவில்லை என்று மன அமைதி கொள்ளலாம். பிள்ளையை வாங்கியவரோ விலைக்கு வாங்கிய உணர்வோடு குழந்தையின் மீது உணர்வுப்பூர்வமாக முழு உரிமை கொண்டாடலாம்.

குறைந்த விலை, அடிமட்ட விலை என்பதைக் குறிக்கக் கிராமப்புறங்களில் இன்றுங்கூடத் ‘தவிட்டு விலை' என்ற தொடரைப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள