பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

கருதப்படுகிறது. நஞ்சும் கொடியும் தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டு அவற்றைப் புதைத்த இடம் தீட்டுக் காலம் முடியும்வரை வழிபடு இடமாகிறது.

குழந்தைப் பேற்றுத் தீட்டைக் கழிக்கும் நாளன்று (பெரும்பாலும் 10 அல்லது 16ஆம் நாள்) துடுப்புக்குழி போடுதல் அல்லது தொடுப்புக் குழி போடுதல் என்னும் சடங்கு நடை பெறுகிறது.

குழந்தைப்பேறு நாள் தொடங்கித் தீட்டுக் கழிக்கும் நாள் வரை பெற்றவள் யோனித் தெய்வத்தின் ஆளுகையில் இருக்கிறாள். எனவே அந்தக் காலப்பகுதி விலக்கிற்குரிய காலமாகக் கருதப்படுகிறது. தீட்டுக் கழிக்கும் சடங்கும் ஆண் விலக்கிற்கு உரியதாகக் கருதப்படுகிறது.

கிராமப்புறங்களில் பெரும்பாலும் வீட்டின் பின்புறம் உள்ள மண் தரையில் ஆழமாகக் குழிதோண்டி நஞ்சையும் கொடியையும் புதைக்கின்றனர். பின்னர் அந்த இடத்தைச் சுற்றி ஓலை அல்லது தட்டி கொண்டு வேலியிட்டு மறைக்கின்றனர். குழந்தைபெற்ற தாய் தீட்டுக் காலம் கழியும்வரை அம்மறைப்பினுள் நின்றுகொண்டு குளிக்கிறாள். அவள் குளித்த நீர் வெளியில் வராதவண்ணம் அந்தக் குழிக்குள்ளேயே இறக்கி விடப்படுகிறது.

பதினாறாம் நாள் தீட்டுக் கழிக்கும் சடங்கு குழியின் முன்னர் நடைபெறுகிறது. மூன்று இலைகளில் உணவினைக் குழியின் முன்னால் படைக்கிறார்கள். சோற்றின்மீது கருவாட்டுக் குழம்பு ஊற்றுகிறார்கள். அவித்த முட்டையும், காயமும் கருப்பட்டியும் சுக்கும் சேர்ந்த மகப்பேற்று மருந்து உருண்டையினையும் இலைகளின்மீது வைக்கிறார்கள். பின்னர் சோற்றின்மீது ஒரு சிறிய மரக்குச்சியினை ஊன்றி வைக்கிறார்கள்; செம்பு நிறையத் தண்ணீர் வைத்து, அதன்மீது உதிரிப் பூக்களைத் தூவுகிறார்கள். பிறகு சூடத்தைப் பொருத்தி ஆரத்தி காட்டி, 'துடுப்புக்குழி நாச்சியாரே! இடுப்புக் குறுக்கு நோகாம் பிள்ளையையும் தாயையும் காப்பாத்தம்மா!' என்று சொல்லிச் சாமிகும்பிடுகிறார்கள். பிறகு மூன்று இலையில் உள்ள உணவையும் குழந்தை பெற்ற தாய்,