பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

எனப் பெயர் பெற்றதாகத் தொல்லியல் ஆய்வாளர் குழந்தை வேலன் விளக்கம் தருகிறார். கல்லறை, கல்லறைத் தோட்டம் ஆகிய சொற்கள் இப்பொழுது தமிழ்க் கிறித்தவர்களின் இடுகாட்டையே குறித்து வழங்குகின்றன.

இறந்தவரைப் புதைக்கும் இடங்களும், முறைகளும் தொல்லியல் ஆராய்ச்சியாளருக்கு முக்கியமான சான்றுகளாகும். தமிழ்நாட்டில் காணப்பெறும் புதைவிடங்களை அறிஞர்கள் நான்காக வகைப்படுத்துவர். இறந்த மனிதனைப் புதைத்த இடத்தின் மேல் ஒரு பெரிய கல்லையோ அல்லது கற் குவியலையோ அமைப்பது ஒரு முறை; புதைத்த இடத்தின் மேல் ஒரு கல்லை வைத்துவிட்டு அதைச் சுற்றிலும் 15 அடி குறுக்களவில் வட்டவடிவமாகக் கற்களைத் தரையில் புதைத்து விடுவது மற்றொரு முறை; புதைத்த இடத்தின் மேல் சுமார் 8 முதல் 10 அடி வரை உயரமுள்ள கூம்பு வடிவிலான, அரைகுறையாகச் செதுக்கப்பட்ட கற்களை நடுவது இன்னொரு முறை. நான்காவது வகையே நம் ஆய்வுக்குரியது.

இவ்வகையான கல்லறைகளில் அரைகுறையான கற்பலகைகளைச் செய்து அவற்றைப் புதைக்கப்பட்ட உடலின் நாற் புறமும் நட்டுவிடுவர். இப்பலகைகள் தரைக்கு மேற்புறமாக நான்கடி உயரத்தில் அமைந்திருக்கும். இந்நான்கு கற்பலகைகளின் மேலும் பொருந்துமாறு மேலே ஒரு கற்பலகை வைக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டில் நிறுத்தப்பட்ட கற்பலகை ஒன்றில் சிறிய துளை இடப்பட்டிருக்கும். இந்த அமைப்பு, மொத்தத்தில் ஒரு அறைபோல இருக்கும். அதாவது இக்காலத்தில் பெரிய நிறுவனங்களில் வாயிற் காவலருக்காக அமைக்கப்பட்டுள்ள சிற்றறைபோல இருக்கும்.

முதல் வகைக் கல்லறைகள் தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், இரண்டாம் வகை தமிழ்நாடு முழுவதிலும் காணப்படுகின்றன. புதைக்கப்பட்ட இடத்தின்மீது மிகப்பெரிய கல்லை வைக்கும் அமைப்பினைச் சங்க இலக்கியம் ‘நெடுங்கல்' என்று குறிப்பிடுகிறது. கூம்பு வடிவிலான ஒற்றைக் கற்கள் தருமபுரி