பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

மாவட்டத்தில் காணப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் menhirs என்பர்.

அறைபோலக் கற்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை அருகிலும், கிருஷ்ணகிரிக்கு அருகிலுள்ள மல்லசமுத்திரம் மலையிலும் காணப்படுகின்றன. இதை அவ்வூர் மக்கள், 'குரங்குப் பட்டடை' என்றும் பஞ்ச பாண்டவர் வனவாசத்தின்போது தங்கியிருந்தவை என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வகையான கல்லறைகள் கொடைக்கானல் அருகில் பண்ணைக் காட்டிலும் காணப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. இறந்த மனிதனுக்காகக் கல்லைப் பலகைபோலச் செதுக்கிச் சிறிய வாழ்விடம் போல அமைக்கப்பட்ட இந்த அமைப்பில் இருந்தே 'கல்லறை' என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். 'பாறை' என்ற பொருளில் தொடங்கி, ‘அறுக்கப்பட்ட பாறை' என்ற பொருளில் விரிந்து, 'சிறிய வாழ்விடம்' என்ற பொருளில் அறை என்ற சொல் நிலைப்பட்டிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட அனைத்து வகைக் கல்லறை அமைப்புக்களும் கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தொடங்கியவை என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஒரு சிறிய சொல் மனித குல வரலாற்றின் பக்கங்களை நுணுக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வகையான சொற்கள் தமிழில் நிறைய உள்ளன.

5. தமிழகப் பௌத்தம் : எச்சங்கள்

தமிழ்நாட்டில் இன்றும் படித்தவர்கூட இப்படித் தான் சொல்கிறார்கள்: “சமணமும் பௌத்தமும் வட நாட்டில் பிறந்து வளர்ந்த மதங்கள். தமிழ்நாட்டிற்கும் அவற்றிற்கும் சம்பந்தம் இல்லை." உண்மையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த மதங்கள் ஆகும். கடைக்கோடிச் சிற்றூர்வரை அவை பரவி இருந்தன. கி.பி. ஏழாம்