பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

தொடங்கினர். சமண மதத்தின் கொடையாளர்கள் இவ்வகையான ஆடையில்லாத் துறவிகளுக்காக அவர்கள் தங்கும் குகையின் தரைப் பகுதியைப் படுக்கைபோலச் சமதளமாகச் செதுக்கிக் கொடுத்தனர். அந்தக் குகைகளுக்கு அருகில் மழைத் தண்ணீர் தேங்குவதற்கு ஒரு சிறிய குழி வெட்டப்பட்டிருக்கும். அந்தத் துறவிகளிடம் நீருண்ணும் பாத்திரம்கூடக் கிடையாது. அவர்கள் எட்டு நாள் (அட்டோபவாசம்), பதினாறு நாள் (சோடசோபவாசம்) உண்ணா நோன்பு இருக்கும் வழக்கம் உடையவர்கள். உண்ணா நோன்புக் காலத்தில் அருகில் இருக்கும் குழியிலுள்ள மழைநீரைக் கையினால் சேந்தி அருந்துவார்கள். மக்களின் மருத்துவ உதவிக்காகச் சில மூலிகைகளும் ஏடுகளும் மட்டும் அந்தக் குகையில் இருக்கும். காலத்தால் முற்பட்ட தமிழ் (தமிழி தமிழ் பிராமி) எழுத்துக்கள் இவ்வகை சமணக் குகைத் தளங்களிலிருந்தே இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இப்படிப்பட்ட குகைத் தளங்களை மதுரைக்கருகில் அழகர் மலை, ஆனைமலை,திருப்பரங்குன்றமலை, திருவாதவூர், சமணமலை, நாகமலை (மதுரை காமராசர் பல்கலைக்கழக மலையின் மேற்குப் பகுதி) ஆகிய டங்களில் இன்றும் காணலாம். நாகமலையிலுள்ள புளியங்குளம் குகையில் மட்டும் ஐம்பது படுக்கைகளுக்கு மேலாக வெட்டப்பட்டுள்ளன.

ஆடையில்லாச் சமணத் துறவிகள் பசித்த நேரத்தில் மட்டும் அருகிலுள்ள ஊருக்குள் நுழைந்து கையினிற் பிச்சை ஏற்று உண்டு செல்வர். கல்வி, மருந்து, உணவு ஆகிய மூன்று கொடைகளும், அடைக்கலம் அளித்தலும் சமண மதத்தின் தலையாய அறங்கள் ஆகும். இவற்றுள் சோற்றுக் கொடை (அன்ன தானம்) இல்லறத்தார்க்கு மட்டுமே இயலும்.

‘ஞானதானம்’ செய்வதற்காகச் சிறுபிள்ளைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கு ஆடையில்லாத் துறவிகள் அழைத்துக் கற்றுக்கொடுத்தனர். குகைத்தளத்தில் பிள்ளைகள் அமர்வதற்கு வேறு இடம் கிடையாது. பள்ளித் தளத்தின் (கற்படுக்கைகளின்) மீதுதான்