பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

இதுவேயன்றித் திகம்பர சமணத் துறவிகளின் உடற்சுத்தம் பேணாத தன்மையும், உள்ளத்தளவில் அவர்களைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியது. சில மரப்பட்டைப் பொடிகளை வாயில் இட்டுக் கொள்வதைத் தவிர அவர்கள் பல் விளக்குவதில்லை; எனவே 'ஊத்தை வாயர்' என்று தேவாரம் அவர்களைக் குறிப்பிடுகிறது. அவர்கள் கண்களில் பீழைகட்டி, கொசு (கொதுகு) மொய்த்துக் கொண்டிருந்ததாகவும் தேவாரத்தில் குறிப்புக்கள் கிடைக்கின்றன. திகம்பர சமணத் துறவியர் உடம்பிலுள்ள அத்தனை மயிர்க்கால்களையும் (புருவத்திலும், இமையிலும் உள்ள மயிரையும்கூட) கையினால் பறித்தெடுக்கும் ‘லோச்சனம்' என்னும் நோன்பினையும் நோற்றிருக்கிறார்கள். 'கண்ணழலத் தலைபறித்து' எனத் தேவாரம் இதனைக் குறிப்பிடுகிறது. இத்தகைய கடுமையான துறவு நெறியும்கூடச் சமணம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணமாகும்.

சித்தர்கள்

சித்தர்கள் என்போர் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கிய ஒரு கூட்டத்தாராவர். 'சித்து வேலை அறிந்தவர்கள்' என்பது இந்தச் சொல்லுக்குப் பொருள். நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் நடப்பது, குளித்தல், உணவு உடைத் தேவைகளைப் பொருட்படுத்தாமல் வாழ்வது, ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவது, துறவிகளாகவும்,எதற்கும் கட்டுப்படாதவர்களாகவும் வாழ்வது, தேவைக்கேற்ப உடலை உருமாற்றிக் கொள்வது முதலியன சித்தர்கள் செய்துகாட்டும் சித்து வேலைகளாகும்.

கிராமப்புறங்களில் இன்றுவரை ஆங்காங்கு வாழ்ந்த சித்தர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கதைகள் வழங்கி வருகின்றன. பெரும்பாலான இடங்களில் சித்தர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் கோயில் ஆக்கப்பட்டிருக்கிறது.

நாட்டுப்புற மக்களிடையே சித்தர்கள் மரியாதைக் குரியவர்களாக விளங்கியதற்குக் காரணம் அவர்களின் பற்றற்ற வாழ்க்கையும், அவர்களின் மருத்துவ அறிவும் ஆகும். மண்ணையும் மருந்தாக