பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

தமிழ் இலக்கியம்போலத் தமிழ் இலக்கணமும் பழமையானது. செவ்விலக்கியங்களை உடையதேனும் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பு பெரும்பாலும் இன்றைய பேச்சு மொழியோடு ஒத்திசைவதாகவே அமைந்துள்ளது. வழக்கு, செய்யுள் என்ற இரண்டையும் கணக்கில்கொண்டே தமிழில் எழுத்திலக்கணமும், சொல் இலக்கணமும், பொருள் இலக்கணமும் செய்யப்பட்டன என்று தொல்காப்பியத்தின் பாயிரம் கூறுகின்றது.

இன்றைய பேச்சுத் தமிழில் அமைந்துள்ள சில இலக்கணக் கூறுகள் தொல்காப்பியர் காலந்தொட்டே நிலவி வந்திருக்கின்றன. எனவே, தொல்காப்பியம் இன்றைய பேச்சுத் தமிழுக்கும் இயைபுடையதாக இருக்கின்றது. தமிழ் மொழி சமூகத்தோடு கொண்டுள்ள உயிர்ப்பாற்றல் மிக்க உறவினை எடுத்துக்காட்டும் சான்றுகளாக அவற்றைக் கருதலாம்.

பேச்சு மொழியில் பிறமொழியாளர்களின் பட்டறிவும், கண்டுபிடிப்புகளும், கருவிகளும், சொற்களும், உறவும், ஆதிக்கமும் எதிரொலிப்பது இயல்பு. அவ்வாறு கலந்த பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போதும் கூட தமிழின் இலக்கண அடிப்படை சிதையாமல் நிற்கின்றது. இவ்வுண்மையைச் சில சான்றுகளால் விளக்கலாம்.

1) நிலைமொழி இறுதியிலுள்ள உயிர் ஒலி வருமொழி முதலில் உள்ள உயிர் ஒலியோடு சேருமானால் உடம்படு மெய் புதிதாகத் தோன்றும். (எ டு.) கோ + இல் கோயில் அல்லது கோவில். ஆங்கிலச் சொற்களான co, operation என்ற இரண்டு சொற்களையும் இணைத்து cooperation, cooperative, கோவாப்பரேசன், கோவாப்பரேட்டிவ் என்றே வகர உடம்படு மெய்யுடன் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

2) நெடில் தொடர்க் குற்றியலுகரம் (காடு, வீடு) உருபேற்கும் போது காட்டை, வீட்டில் என்று இரட்டித்து வருவது தமிழ் இலக்கணம் கூறும் வழக்கு. ஆங்கிலச் சொல்லான ரோட் என்பதை ரோடு எனப் பேச்சுத் தமிழில் நெடில் தொடர்க் குற்றியலுகரமாக வழங்குகின்றனர்.