பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

போனதைப் புரிந்துகொண்ட பீட்டர் பாண்டியன் 1819இல் அரசாங்கப் பணத்தையும் தான் எடுத்துச் செலவழித்ததை ஒத்துக்கொண்டு ஒரு கடிதம் எழுதி அதை சீல் செய்து தன்னுடன் வைத்துக்கொண்டார். 1828இல் திடீரென்று அரசாங்க நிலைமையை உணர்ந்த பீட்டர் பாண்டியன் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவரது கடிதம் கைப்பற்றப்பட்டது. கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. முடிவில் ஏழு இலட்சத்து எழுபத்து நாலாயிரம் ரூபாய் அரசாங்கப் பணம் அவரால் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதிலே அவர் உண்மையிலேயே எடுத்தது எவ்வளவு, கீழ்நிலை அதிகாரிகள் சுருட்டிக்கொண்டது எவ்வளவு என்று தெரியவில்லை. தொடர்ந்து நடந்த விசாரணையில் கீழ்நிலை அதிகாரிகள் ஐந்து பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர். எழுபதாயிரத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்களும் பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகளும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்று மதுரை மாவட்ட கெசட்டியர் (1914) குறிக்கின்றது.

இலக்கியங்கள் குறிப்பிடும் 'கொடைமடம்' என்ற சொல்லைப் பீட்டர் பாண்டியன் வாழ்க்கை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. அரசு ஆவணங்கள் என்னவாயினும் சொல்லட்டும்! மதுரைப் பகுதி நாட்டுப்புற மக்களின் உணர்வு களைப் பீட்டர் பாண்டியன் ஒரு நூற்றாண்டுக் காலம் கட்டி ஆண்டிருக்கிறார் என்ற வரலாறு நமக்குத் தெரிகிறது. இந்த நல்ல மனிதரின் வெண்சலவைக் கல்லறை மதுரைத் தெற்காவணி மூலவீதியின் மேற்குப்பகுதியில் உள்ள தேவாலயத்தில், முன் தளத்தின் கீழுள்ள ஒரு இருட்டறையில் இருக்கிறது.

இறப்புச் சடங்கும் விருந்தோம்பலும்

மரணம் என்பதை வாழ்வின் முற்றுப்புள்ளி என்று தமிழர்கள் நினைக்கவில்லை. தங்களிடமிருந்து இறந்தவர்களுக்கான உறவும் உணர்வும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டன என்றும் அவர்கள் கருதவில்லை.