பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

குறித்தது. நிர்வாணத் துறவியாகச் சமண மதத்தில் இருந்த திருநாவுக்கரசர் சமண மடத்தை விட்டு வெளியேறும்போது 'வெண்புடைவை மெய் சூழ்ந்து’ வந்ததாகச் சேக்கிழார் குறிப்பிடுவார். இக்காலத்துப் பெண்கள் உடுத்தும் 14, 16, 18 முழச் சேலைகள் தெலுங்கு பேசும் மக்களின் உறவால் ஏற்பட்ட வழக்கமாகும். அரையாடையும் மேலாடையுமான பெண்களின் இரட்டை ஆடை ஓருடையானது இக் காலத்தில்தான். இச்சேலையும் முதலில் மஞ்சள், சிவப்பு என்னும் இரண்டு வண்ணங்களை உடையதாய், 'கண்டாங்கி' என்று வழங்கப்பட்டது. இரவிக்கை எனப்படும் பெண்கள் மேலாடையும் தெலுங்கு மக்களின் உறவால் ஏற்பட்ட வழக்கமேயாகும். இரவிக்கை என்ற சொல்லும் தெலுங்கு மொழியில் இருந்து வந்ததே. பிராமணரல்லாத ஏனைய தமிழ்ச் சாதிப் பெண்கள் அனைவரும் சேலையின் மேற்பகுதியினை (மாராப்பு) தோளின் இடதுபுறமாக இட்டுக்கொள்வது பிராமணர்களும் சில தெலுங்குச் சாதியினரும் வலதுபுறமாக அதனை இட்டுக்கொள்வர். பெரும்பான்மையான மக்களின் வழக்கமான இடதுபுறமான மாராப்பு அனைவராலும் கைக்கொள்ளப்பட்டு விட்டது.

பெண்கள் அணியும் உள்ளாடையான பாவாடையும் கடந்த சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே புழக்கத்திற்கு வந்திருக்கின்றது. அதற்கு முன் சிறிய பெண் குழந்தைகள் சிற்றாடை எனப்படும் அரையாடை அணிந்திருக்கிறார்கள். இதற்குக் 'கன்னி சிற்றாடை' என்று பெயர். இன்றளவும் கிராமப்புறங்களில் குடும்பச் சடங்குகளில், இளம்பெண்ணாக இறந்த பெண்களின் நினைவிற்குக் கன்னி சிற்றாடையைப் படைக்கின்றனர். இந்த ஆடை மஞ்சளும், சிவப்பும் கலந்த மிகச் சிறிய கண்டாங்கிச் சேலையாகும்.

உயர்சாதியினைச் சேர்ந்த பெண்கள் 16 முழச் சேலையினைத் தார் இட்டுக் கட்டிக்கொண்டதால் (மடிதார் மடி சார்) அவர்களிடத்திலும் உள்ளாடை அணியும் வழக்கம் இல்லை எனத் தெரிகிறது.