பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

இரட்டைச் சங்காகவோ அமைகிறது. வைணவத் தீட்சை பெற்றவர்கள் இறந்தால் இத்துடன் பூண்கட்டிய திருச்சங்கம் ஒன்றும் தனியாக ஊதப் பெறுகிறது. அதற்குச் சில ஊர்களில் ‘பெருமாள் சங்கு' என்றும் பெயர். இதனை 'வரி சங்கம்' என்று இலக்கியங்கள் கூறும். பிறப்புச் சங்கு என்னும் குழந்தை பிறந்தவுடன் சங்கினை ஊதி மகிழ்ச்சியாகச் செய்தி தெரிவிக்கும் பழக்கம் இன்று காணப்பெறவில்லை. ஆனால் திருமணத்தின்போது சங்கு ஊதும் பழக்கம் மதுரை, முகவை மாவட்டங்களில் சில ஊர்களில் காணப்பெறுகின்றது. முகவை மாவட்டத்தில் இடையர்களில் தாலிகட்டும் நேரத்தில் திருச்சங்கு ஊதும் வழக்கம் 1980வரை இருந்தது. மதுரை மாவட்டம் மேலூர் கள்ளர் சாதியினரில் மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்பொழுது மணமகனின் சகோதரி திருச்சங்கு ஊதி அழைத்து வருகிறாள். இவை தமிழர்கள் இடத்தில் முச்சங்க வழக்கம் இருந்ததற்கான எச்சங்களாகும்.

சங்கு இடப்பக்கமான புரியினை உடையதாகும். ஒரு இலட்சம் சங்குகளில் ஒன்று வலப்புறம் வளைந்த புரியினை உடையதாக இருக்கும் என்பர். வலம்புரிச் சங்கு அக்காலத்தில் அரண்மனைகளுக்கும் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சங்கு குளிக்கும் மீனவர்களால் வழங்கப்பெற்றுள்ளது. அதனுடைய விலை மதிப்பும் அதிகமானதாகும். வலம்புரிச் சங்கு பற்றிச் சங்க இலக்கியங்கள் அனைத்தும் பெருமையாகப் பேசுகின்றன. சங்கு குளிக்கும் மீனவர்கள் வலம்புரிச் சங்கு கிடைத்தால் கடற்கரையில் சங்கு ஊதி அந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் பிறருக்குத் தெரிவித்தனர் என்ற சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது.