அறிவின் கேள்வி
(லின்வுட் ரீட் எழுதிய நூலில் கண்டபடி)
உலக வழக்கு இது.
ஆதி முதல்வன் ஒருவனால் ஆக்கப்பட்டது இவ்வுலகு. அவன் தன்னைப்போலவே மனிதனையும் படைத்தான். அதனால் மனிதனின் உள்ளமும் தேவனின் உள்ளத்தைப் போல்தான். ஆனால் மனிதருள்ளம் பூரணத்துவ மற்றதால், ஆசைகள் அலை மோதுவதாய் ஆசைகள் வளர்ந்து பாபக்கறை படிந்தததாய், குறுகிய சக்தி பெற்றதாயிருக்கிறது. அவனது உள்ளமோ, அழகின் ஆலயம்; சக்திகளின் பூரணம்; அன்பின் முழு உரு; அவன் சர்வ வல்லமை பொருந்தியவன்; எங்குமிருப்பவன். தான் படைத்த மனிதர்களிடம் அவனுக்கு அன்பு உண்டு. ஆனால் அவர்களது போக்கைக் கண்டு துயருறுகிறான். சும்மா சோதனை ரீதியாகத்தான் மனிதர்களை பூமியிலே படைத்திருக்கிறான். பாபம் செய்தாலும், பச்சாதாபப்பட்டு மனம் உருகுவோரை, தவறை உணர்ந்து தங்களைத் தாழ்த்துவோரை, எளியவர்களை, அவன் மன்னித்து அழிவிலா இன்பம் அருளுவான். கொடியோராய், கல் நெஞ்சம் பெற்றவர்களாய், முரண்டு பிடிப்போராய் வாழ்கிறவர்களை, அவனது ஆக்கினைகளை மறுப்போரை, அவனை எதிர்ப்போரை, அவனது நீதியின்படி தண்டிப்பானாம். இந்தச் சன்மானமும், இவ்விதக் தண்டனைகளும், உலகிலே மனிதன் வாழ்க்கையில் உடலுள் உரையும் ஆத்மாமீது சுமத்தப்படும். இந்த ஆத்மா என்பது மனம், அறிவு ஆகியவைகளினின்றும் தனியானது. கடவுளின் சந்நிததியிலே ஏழையின் ஆத்மாவுக்கும், பணக்காரன், பெரிய தத்துவஞானி, சிறந்த கவி போன்றோரது ஆத்மாக்களுக்கும் பேதமே கிடையாது.