பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 அக்காந்தேசி

வண்ணங்கள் (Oil paints), அச்சு மை, சவுக்காரம் ஆகியவை செய்வதற்குப் பயன்படுகின்றது. கனியைச் சேகரித்து மூன்று மாதகாலம் வரை அதை உலர வைக்கின்றார்கள். பருப்பிலிருந்து முதன் முதலில் பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய்க்கு “வெர்ஜின் " (Virgin) என்று பெயர். இதைச் சாப்பிடப் பயன்படுத்துகின்றார்கள். பிறகு சக்கையில் நீரை ஊற்றி இரண்டாம் முறை பிழிந் தெடுக்கப்படும் எண்ணெய்க்கு "'ஃபயர் டிரான் (Fire drawn) என்று பெயர். இதைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள். எஞ்சியதை ஆடு மாடுகளுக்குப் பிண்ணாக்காகக் கொடுக்கிறார்கள். வெர்ஜின் எண்ணெய் நிறமற்றது. சிறிது மணமுடையது. 94° வெப்பத்தில் வெண்ணெய் போன்று திரளுகின்றது. இதை ஆலிவ் எண்ணெய்க்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். "ஃபயர் டிரான்" எண்ணெய் பசுமை நிறமுடையது; உலர் தன்மையுடையது; குடற்புழுக்கொல்லியாகப் பயன்படுகின்றது (Aothelminthic); அழுக்கு போக்கும் (Detergent) தன்மையுடையது. இலைகளுக்குத் துவர்ப்புத் தன்மை உண்டு. இவை ஊட்ட நீர்மமாகப் (Tonic) பயன்படுகின்றன. இவற்றின் சாறு கட்டி, புண்களை ஆற்ற வல்லது. மூட்டு வலிக்கு (Rheumatism) இதன் கனி மருந்தாகிறது. நஞ்சுக்கு மாற்று மருந்தான (Alexipharmic) புகழ்பெற்ற “மித்ரிடேட்ஸ்” என்ற மருந்தினை 2 அக்ரூட்கள். 2 அத்திப் பழங்கள், 20 நெல் தாவர இலைகள் கொண்டு அரைத்து உப்பைச் சேர்த்துச் செய்கின்றார்கள். “காகாசி அக்ரூட்” (காகித அக்ரூட்) அதாவது, மெலிந்த கனித்தோல் கொண்ட வகையைக் காஷ்மீரத்திலும், வடமேற்கு இமயமலையிலும் உண்கிறார்கள். சுள்ளிகளும், இலைகளும் ஆடு மாடுகளுக்குத் தீவனமாகின்றன. இதன் வைரக்கட்டை பழுப்பு நிறம் பெற்றது. கறுப்புக் கோடுகளும், புள்ளிகளும் உள்ளன. கட்டை கெட்டியானது. கட்டைக்கு அழகான உருவக்குறிகளும் (Figures) மெருகும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உண்டு. மரச்சாமான்கள் செய்வதற்கும், கலைப்பொருள்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யவும் உதவுகின்றது. கட்டையை எளிதில் செதுக்கலாம். பதித்துச் செய்யும் வேலைப்பாடுகொண்ட பொருள்கள் செய்வதற்கும் பயன்படுகின்றது. துப்பாக்கியின் பாகங்கள், மேசை, நாற்காலி, இசைக்கருவிகள், ஆகாயவிமானத்தின் பாகங்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. கட்டை சுருங்காது; வெப்பத்தாலும், ஈரப்பசையாலும் பாதிக்கப்படுவதில்லை.இதன்பட்டையைப் பல்குச்சியாகவும், உதட்டுச்சாயமாகவும் பெண்கள் பயன்படுத்துகின்றார்கள். இதன் சுள்ளிகளை வீட்டு அறைகளினுள் வைத்து ஈக்கள் வராமல் தடுக்கின்றார்கள். முதிர்ச்சியடையாத காய்களில் அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) நிரம்பியிருக்கின்றது. இதனால் இதனைப் பயன்படுத்தி ஊறுகாய்கள். மார்மலேடுகள் (Marmalades). சட்டினி (Chutney), சர்பத் (Syrup) போன்றவைகள் தயார் செய்கின்றார்கள்.

எம். எல்.லீ.

நூலோதி Brandis. D.Indian Trees.p 619, Constable & Co.. Ltd, London. 1921. Hill, A.F. Economic Botany, p. 560 Tata McGraw Hill Book Co., New York, II Ed. 1952 Hooker, J.D. in Hook. f Fl. Br. Ind. V. p. 595. 1888. The Wealth of India, V. p. 332. CSIR Publ.. New Delhi. 1959.

அக்காந்தேசி இது இணைந்த அல்லி வட்ட (Gamopetalous) இருவிதையிலைக் குடும்பமாகும். இதில் ஏறக்குறைய 240 பேரினங்களும் 2200 சிற்றினங்களும் இருக்கின்றன. அக்காந்தேசி (Acanthaceae) குடும்பம் குறிப்பாக இந்தோ மலேசியா (Indo Malaysia). ஆப்பிரிக்கா (Africa), பிரேசில் (Brazil). மத்திய அமெரிக்கா (Central America) ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளில் பரவியிருக்கின்றது. தென்னிந்தியாவில் 38 பேரினங் களும் 42 சிற்றினங்களும் இருக்கின்றன.

பொதுப் பண்புகள்: பல பருவங்கள் வாழும் குறுஞ்செடிகளும் (Perennial herbs), புதர்ச்செடிகளும் (Shrubs) இருக்கின்றன. இவற்றில் சில முட்களைப் பெற்றிருப்பதுண்டு. மரங்கள் மிக அரிய. ஒரு சில சிற்றினங்கள் கொடிகளாகவும், நீர்நிலைத் தாவரங்களாகவும் காணப்படுகின்றன. இலைகள் தனித்தவை; எதிரடுக்கிலமைந்திருப்பவை; இலையடிச் சிதல்கள் கிடையா; கணுக்கள் (Nodes) பருத்திருக்கும். மஞ்சரி இரு பக்கம் கிளைத்த சைம் (Dichasial cyme), ரெசிம் (Raceme) அல்லது பூக்கள் தனித்திருக்கக்கூடும். மலர்கள் இருபாலானவை; இருபக்கச்சமச்சீருடையவை (Zygomorphic). புல்லி அல்லி வட்டங்களில் 4—5 இதழ்களுண்டு. ஒவ்வொரு மலருக்கும் ஒரு மலரடிச்சிதலும் (Bract) இரு மலர்க்காம்புச் சிதல்களும் (Bracteoles) உண்டு. அல்லிவட்டம் 5 பிளவுகளைக் கொண்டதாகவோ, இரு உதடுகளைக் கொண்டதாகவோ (Bilabiate) இருக்கும்; மேல் உதடு நிமிர்ந்து இரு பிளவுற்றும், கீழ் உதடு மூன்று பிளவுகளைப் பெற்றுமிருக்கும். மகரந்தத் தாள்கள் சாதாரணமாக 4; அல்லி ஒட்டியவை (Epipetalous): இவற்றில் ஒரு சோடி மற்ற சோடியை விடச் சற்று உயரத்தில் அதாவது இவை இருமட்டத்தில் (Didynamous) காணப்படும்; சில சிற்றினங்களில் இரு தாள்கள் மட்டுமுள்ளன. சிலவற்றில் மட்டும் மலட்டு மகரந்தத்தாள்கள் (Staminodes ) உள்ளன. மகரந்தப் பைகளின் வடிவமும், அவையமைந்திருக்கும் முறையும் பெரிதும் வேறுபடுகின்றன; மகரந்தத்தின் வடிவம், அளவு, வெளிப்புற அமைப்பு ஆகியவை பெரும்பாலான பேரினங்களில் வெவ்வேறு வகையாக இருப்பது குறிப்பிடத்தக்க இயல்பாகும்.