பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

மணவையாரின் சமய நல்லிணக்க பணிகள்


சீறாப் புராணத்தைப் பலரும் கற்று மகிழ இத்தொகுப்பு நூல் உற்ற கருவியாக அமைந்தது.

இக்கருத்தரங்கில் பேராசிரியர் சிலம்பொலி சு.செல்லப்பனார் 'உமறுதரும் சீறாவில் தமிழ்ப் பண்பாடுகள்' பற்றி வழங்கிய ஆய்வுரை மணவையாரின் மனம் கவர்ந்தது. ஆகவே அடுத்துச் சீறாப்புராணத் தொடர் சொற்பொழி வினைச் சிலம்பொலியார் வழங்கிட மணவையார் ஏற்பாடு செய்தார். இஸ்லாமியப் பொருள் என்பதால் தொடக்கத்தில் தயங்கிய சிலம்பொலியார், மணவையாரின் வற்புறுத்தலுக்கிணங்கி ஒப்புதலளித்தார்.

இத்தொடர்ச் சொற்பொழிவு நிகழ்வதற்கு மணவையார் தேர்ந்தெடுத்த இடமும் சிறப்புக்குரியதாகும். தமிழகத்தில் சமய சமரசஞானியாகப் போற்றப்பெறும் வடலூர் இராமலிங்க வள்ளலார் தம் பிள்ளைப் பருவத்தில் பெரிய புராணச் சொற்பொழிவாற்றிய இல்லம் இன்று மறைமலையடிகள் நூலகமாக அமைந்துள்ளது. அந்நூலகத்தின் மணி மண்டபத்திலேயே சிலம்பொலியாரின் சீறாப்புராணம் தொடர் சொற்பொழிவு நிகழ மணவையார் ஏற்பாடு செய்தார்.

இருபத்தைந்து சொற்பொழிவுகளைக் கொண்ட தொடராகச் சிலம்பொலியார் ஆற்றிய உரைகளைத் தொகுத்து 1985-ஆம் ஆண்டில் 'நெஞ்சையள்ளும் சீறா' என்னும் நூலாகத் தமது மீரா பதிப்பகத்தின் சார்பில் மண வையார் வெளியிட்டார். இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தி ராத சிலம்பொலியார் சீறாப்புராணத்தை ஆழ்ந்து கற்று, கவி.கா.மு.ஷெரீப், 'முஸ்லிம் முரசு' இதழின் முன்னாள் ஆசிரியர் திரு. ஹஸன் ஆகியோரிடம் ஐயங்களைக் களைந்து தெளிவுபெற்று ஆற்றிய இச்சொற்பொழிவுகள் சீறாவின் சிறப்பினை அற்புதமாக உணர்த்துகின்றது. 1136 பக்கங்களைக் கொண்ட இந்நூல் சீறாவின் பெருமையை முழுமையாக உணர்த்தும் நூல் என்பதில் ஐயமில்லை.