பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகுப்பாசிரியர்

9




"வெறும் தமிழை மட்டுமே மேலோட்டமாகக் கற்று விட்டு, ஒன்றுக்கும் உதவாத வெற்றுக்கட்டுரைகளையும் பாடல்கள் என்ற பெயரில் சொற்கூட்டு மடக்குவரிக் குப்பை கூலங்களையும் தகவில்லா சிறுசிறு கட்டுக் கதைகளையும், அடுக்கு நிகழ்வுகளை, நிகழ்ச்சிச் சருகுகளை, பாலியலுணர்வேற்றி பருத்த தாள் கட்டுகளாக வெளியாகும் புதினப் பொக்குகளையும் பரப்பிக் கொண்டு, தமிழறிஞர்களாகவும், தமிழ்க் கவிஞர்களாகவும் கதையாசிரியர்களாகவும் பெருகி வரும் தக்கைத் தமிழர்களுக்கிடையில் தமிழ் வைரங்களாகவும் மாணிக்க மணிகளாகவும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணத்தக்க தமிழ்ப் பேரறிஞர்களுள் மணவை முஸ்தபாவும் ஒருவர் என்பதைப் பெருமையோடும் பெருமிதத்தோடும் குறிப்பிடவேண்டியுள்ளது"

(தென்மொழி - மார்ச் 95)

என விளக்கமாகக் கூறியுள்ளார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

காலத்துக்கேற்ற பணியை மணவையார் உய்த்துணர்ந்து ஆற்றிவருவதனால் தமிழ் வளர்ச்சி வரலாற்றில் தனக்கெனத் தனிப் பெரும் அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார் என்பது மறக்கவோ, மறைக்கவோ இயலாததொன்றாகும். இதனை 'உண்மை’ இதழ்.

"திரு. மணவை முஸ்தபாவுக்கு, தமிழ் வளர்த்த சான்றோர்கள் வரிசையில் மிகுந்த தனித்துவம் உண்டு. காரணம், ஆங்கில மொழியினிடம் அவலப் பிச்சையேற்ற அறிவியல் தமிழனுக்கு உறங்கிக் கிடந்த தமிழின் கருவூலத்தைத் திறந்து காட்டிய புரட்சியாளர் அவர்"

என்று கூறுவதன் மூலம் தமிழின் திறத்தை, தமிழனின் பெருமையை வானுற உயர்த்திய பெருமைக்குரியவர் மணவையார் என்பது தெளிவாகிறது.