பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

அறிஞர் முஸ்தபா அவர்களின் அயராத உழைப்பு, தமிழறிவு, தமிழ்மொழியை உலகமெலாம் பரப்பவேண்டும் என்னும் நன்னோக்கம், உண்மையான தமிழ்ப்பற்று, தொண்டுள்ளம், அறிவியல் ஈடுபாடு முதலிய சிறப்புத் தகுதிகளே காரணம் ஆகும்.

உலக இதழாகிய ‘யுனெஸ்கோ கூரியர்’ பெரிதும் அறிவியல் தொடர்பான கட்டுரைகளையே வெளியிட்டு வரும் ஓர் அரிய ஆய்விதழாகும். இதனுள் வெளியிடப்பெற்று வரும் கல்வி, கலை, பண்பாடு, வரலாற்றியல், குமுகவியல் செய்திகளும் கூட அறிவியல் நோக்கோடு வெளிவருவனவாகும். இதனுள் வரும் அறிவியல், இயந்திரவியல், தொழிலியல், தொழில் நுட்பவியல், மருத்துவ இயல் தொடர்பான செய்திகளை நுட்பமாகவும், எல்லார்க்கும் விளங்கும் வகையிலும் வெளிப்படுத்த வேண்டும் என்றால், அவற்றுக்குத் தக்கபடியான புதிய கலையாக்கச் சொற்களை உருவாக்க வேண்டியது மிகவும் முகாமையான செயலாகும். இதனை ஒரு நோக்கமாகவும் இன்றியமையாத் தேவையாகவும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொர் இதழிலும் நூற்றுக் கணக்கான அறிவியல் தமிழ்ச்சொற்களை உருவாக்கும் திறன் மிகக் கடினமான சிந்தனையுடன் கூடிய செயற்பணியைக் கடந்த 26 ஆண்டுகளாகத் தொய்வின்றியும், சலிப்பின்றியும் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் ஆற்றி வருகிறார்கள் என்றால், அவரின் அருந்தமிழ் வளர்க்கும் பெருந்தமிழ்ப் பணியை எவ்வாறு புகழ்ந்துரைப்பது! அவ்வகையில் அவர் இதுவரை உருவாக்கியுள்ள புதுமைச் சொற்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்து இலக்கத்திற்கும் மேலாக எனில் அவரின் இடைவிடா முயற்சியை எவ்வளவு போற்றியுரைக்கினும் பொருந்துவதன்றோ? அறிஞர்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.


- தென்மொழி, பிப்-மார்ச்’95