பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அறிவியல் தமிழின் விடிவெள்ளி




அந்த வகையில் தமிழில் அறிவியல் மேம்படப்பாடுபட்டவர்களில் மணவை முஸ்தபா அவர்களை முதனிலைப்படுத்திக் குறிப்பிட வேண்டும்.

"வளர்ந்து வரும் 'அறிவியல் தமிழ்' என்னும் இளம் குழவிக்கு செய்தவத்தால் வாய்த்த செவிலித்தாயாக விளங்கு பவர் "கலைமாமணி மணவை முஸ்தபா” என்று தமிழ்ப் பேராசிரியர் எழில் முதல்வன் கூறியுள்ளது (தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம் - பக். 8) முற்றிலும் சரியே.

பேராசிரியர் மது விமலானந்தம் எழுதியுள்ள “தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்" என்ற நூலில், "திரு. மணவை முஸ்தபா ஓர் மறுமலர்ச்சித் தமிழறிஞர்; தமிழ்த் தொண்டே தலையாய பணியாகக் கொண்டவர்; பன்மொழிப் புலமையாளர்; கலைச் சொல்லாக்கச் சிந்தனையாளர் அறிவியல் பேரார்வலர் அருமையான மொழி பெயர்ப்பாளர்; கருமமே கண்ணாயினார்; எளிமையே உருவான, இனிமையே வடிவான தமிழ்க் கருமயோகி; செயற்படு சிந்தையர் சுற்றிச் சுழலும் தமிழ்த்தும்பி; தொண்டே துடிப்பாகக் கொண்ட தூயர் உழைப்பே உயிராக உடையவர்" என்று மணவையாரின் மாண்புகளைப் பலபடக் கூறியுள்ளார்.

காலம் தேடிய தமிழர்

மணவையாரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைப் பார்க்கும்போது அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றுவதற்கென்றே இவரைக் காலம் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கியதாகக் கருத இடம் தருகிறது. அறிவியல் தமிழ் ஒன்றே தனது இலக்காக, உயிர்மூச்சாகக் கருதித் தன் வாழ்வை முழுமையாக அதற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.