பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


இலக்கிய வடிவங்கள் கிளைத்தன. இங்ஙனம் அளப்பரிய ஆற்றல் மிக்க எழுச்சி வடிவங்கள் இஸ்லாமிய இலக்கியத்தில் பெருகின. அந்த வரிசையில் சிகர மகுடம் சீறாப்புராணம் என்பதில் யாவருக்கும் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. அந்தச் சிந்தனைக்கு விருந்தாகும் சீறாப் புராணத் திறனாய்வே இத்தொகுப்பில் விளைந்த தேனடை.

இத்தொகுப்பில் 14 கட்டுரைகள். இதில் 6 கட்டுரைகள் இஸ்லாமியரல்லாதாரால் எழுதப்பட்ட கட்டுரைகள். இதுபோன்ற அமைப்புகளைப் பாராட்டு முகத்துடன் அபுல்கலாம் ஆஸாத் போன்ற சான்றோர், "ஒரு சமயம் சார்ந்தோர் மறுசமயத்தார் இலக்கியத்தை விருப்போடு படித்து அதன் சிறப்புகளை மனந்திறந்து பாராட்டிப் போற்றும் மனப்பக்குவமே நல்ல ஒருமைப்பாட்டு உணர்வு" என்பார்.

நெஞ்சையள்ளும் சிலம்பு எனக் கேட்டிருக்கின்றோம். சிந்தைக்கினிய சீறா என்பதும் இதைப் போன்ற இனிய தலைப்பு. நறுமணப் பொருள் வணிகரின் மகனார் உமறுவின் வாக்கிலும் சிதறிய நறுமணத் திரட்டே சீறாப்புராணம். இஸ்லாமியக் கருத்தரங்கைத் தானொரு தனிமனிதராய் நடத்தி, ஒன்றல்ல இதுபோல் பல எட்டுக்கு மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்திக்காட்டிய இந்நாயகரை, 'கருத்தரங்க இயக்குநர் திலகம்' எனலாம். ஓயாப்பணி செய்யும் இவரைப்பற்றி எண்ணுங்கால் , "நெஞ்சில் தினவெடுத்தால் இமயத்தைப் புரட்டிடலாம்; தாக்க நினைத்தால் இமயம் சிறியது; நீ தூங்க நினைத்தால் உயிரே சுமையது" என்று கவிஞன ஒருவன் கூறியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று இஸ்லாமியரைப் பற்றி வேறுபாடான கணிப்புகள் விரைவாகப் பரவிக் கொண்டிருக்கும் கட்டத்தில்