பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


டையே இலக்கியம் வழி பரப்பும் நோக்கம் கொண்டவராகின்றார். எப்படியாவது வாழாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதியுடையவர்; ஒரு மாதிரியாக வாழ்ந்திடாமல் ஒரே மாதிரியான உறுதியுடன் வாழவேண்டும் எனப் போதிப்பவர். ஏனெனில் சோர்வுற்றுச் சுருங்கிய ஒரு வீர இனம், இஸ்லாமிய இனம். காலவோட்டத்தில் தலை குனிந்து நிற்கின்ற தன் கண்ணான சமுதாயத்தைப் பார்த்து, 'நீ சாய்ந்துதான் இருக்கின்றாய்; சரிந்து விடவில்லை. உன் தலையை நிமிர்த்தித் துறைதோறும் துறைதோறும் ஆக்கப் பணி செய்யத் துடித்தெழு" என்று துவளாமல் தோள் கொடுத்த தூண்களே மணவையாரின் தாள் தோய் தடக்கைகள்; அக் கைகள் படைத்த எழுத்துகள், மறந்தும் பிறன் கேடு சூழாத இஸ்லாமியரை தன் நெஞ்சறியப் பொய்யுரையாப் புனிதர்களை-மானுட சூழலின் மாயசக்தியால் விளைந்து மதிகெட்ட செயல் மாய்க்க வரும்போது, அவர்தம் முகம் காட்டவும், நல் அகம் காட்டவும் அமைந்தது போன்ற காலத்தால் அமைந்த மணவையாரின் இப்பணியைப் பாராட்டக் காலமே காலங்காலமாய் நின்று பாராட்ட வேண்டும். அதற்குக் காலமும் கடந்த அந்த ஆலமே போதுமானவன்.

இதனால் தான் காலம் கட்டிக் கொடுத்த பல தங்கக் கட்டி விருதுகள் அன்னாரைத் தேடி வந்தன. தமிழ்த் தூதுவன்', 'வளர்தமிழ்ச் செல்வர்', 'அறிவியல் தமிழ்ச் சிற்பி', தமிழக அரசு தந்த 'கலைமாமணி' விருது 'திரு.வி.க. விருது' போன்றவை அவற்றுள் சில. கவிஞன் இக்பால் கூறுவான், "சமுதாயம் எனும் சங்கிலித் தொடரிலே ஒளி வீசும் ஒரு மணியாக இணைந்து கொள்" என்று. அதுபோல் இத்திருமாமணியும் அவர்தம் பணியும் நம்மிடையே நின்றொளிர்கிறது.