பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அறிவியல் தமிழ்

[அமளி-படுக்கை; கைசெய்வாணை-அணிசெய்பவனை.]

நந்தட்டன் காண்கின்றான். அஃதாவது, அழகியதொரு படுக்கையில் அமர்ந்து கொண்டு சீவகன் கனகமாலையின் கரிய குழலை அணி செய்து நிற்பதைக் காண்கின்றான். மதிமுகம் என்ற மந்திரத்தை ஒதியவுடன் வாசவதத்தை இருந்த இடத்திலிருந்து ஒரு பேரொளி-இரயில் வண்டியின் முன்னுள்ள அளக்கின் ஒளி போன்றதொன்று-வீசியிருக்க வேண்டும். அவ்வொளி சீவகன் இருப்பிடத்தையும் அவன் மேற்கொண்டிருந்த செயலையும் புலனாக்கி இருக்க வேண்டும். அஃதாவது அவ்வொளி தொலைவிலுள்ள காட்சியைக் காண்பதற்குத் துணை செய்திருக்க வேண்டும் என்று கருதலாம்; இன்றுள்ள தொலைக்காட்சிச் சாதனம் போன்றதோர் அமைப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கலாம்.

பாரதத்தில்: பாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. பாண்டவர்கட்கும் கெளரவர்கட்கும் குருட்சேத்திரம் என்ற இடத்தில் பதினெட்டு நாட்கள் நடந்த போரின் நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் சஞ்சயன் என்பான் அரண்மனையிலிருந்து கொண்டே திருதராட்டிரனுக்கு அவ்வப்போது தெரிவிக்குமாறு ஒர் எற்பாடு இருந்ததை அறிகின்றோம். சஞ்சயனும் ‘கிரிக்கெட் விமரிசனம்’ போல் அவ்வப்பொழுது நிகழும் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே திருதராட்டிரனுக்கு அறிவித்து வருகின்றான் என்பதாக வியாச பாரதத்தால் அறிகின்றோம்.ஆனால் வில்லி பாரதத்தில் அவ்வாறு காணப் பெறவில்லை. எனினும், பதினெட்டாம் போர்ச் சருக்கத்தில் சஞ்சயன் நூற்றுவர் இறந்த செய்தியைத் திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் உரைப்பதாக ஒரு பாடல் காணப்பெறுகின்றது.