பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அறிவியல் திருவள்ளுவம்

இந்தக் குமுகாயவியல் (Social Science) கொள்கை. மேலே கண்ட திருவள்ளுவ இன ஏமக் கருத்தில் மிளிர்கின்றது.

இனம் இல்லாமை - ஏமம்

இனம் ஏமமாவது போன்று இனம் இல்லாமையும் ஏமமாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை மற்றையக் கட்சியுடனோ, கட்சிகளுடனோ கூட்டு சேர்ந்து தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது. இக்கூட்டு அரசியல் இனம் ஆகும். கூட்டில் கொள்கை ஒற்றுமை, குறிக்கோள் ஒற்றுமை பார்ப்பதும் மறைந்து வருகின்றது. கூட்டு சேர்வது வெற்றிக்கு மட்டும் அன்றிக் கட்சிக்கும் ஏமம் ஆக வேண்டும். இதற்கு மாறாக,

‘ஒரு கட்சியுடன் கூட்டு சேராதிருத்தலே வெற்றிக்கும் கட்சிக்கும் ஏமமாக அமையும். காரணம் கூட்டு சேரத் தகுதியின்மை பலவகையால் அமையலாம். அவற்றுள்ளும் இக்காலம் குறிப்பிடத்தக்கதாக ஒரு கட்சியின் தலைமை அதற்குரிய தகுதியைக் கைவிட்டதாகலாம். கட்சித் தலைமை பெருந்தகவான குணம் இல்லாமல் தன் மூப்பு கொண்டதாகுமானால் கூட்டின் ஏமம் குறையும், தலைமையின் தனி வாழ்விலும், பொறுப்பு நடை முறைகளிலும் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பது மாகிய குற்றங்கள் பலவாக இருப்பினும் கூட்டின் ஏமம் கெடும்.'

இவ்வாறு இக்காலத்தில் பொதுவாகக் கருதப்படுகிறது. இக்கருத்து நடைமுறைச் செயற்பாட்டிற்கும் பொருந்தும் நிலை உள்ளது.