பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கோவை. இளஞ்சேரன்

117

இக்காலத்திலும் போரின்போது ’பதுங்கு குழிகள்’ அமைக்கப்படுகின்றன. இவற்றில் போர்வீரர்கள் மறைந்திருந்து தாக்குகின்றனர். இவ்வமைப்பை அறிந்த பகைப் படையினர் எந்த இடத்தில் எந்த நேரத்தில் தாக்குதல் வருமோ என்று எதிர்பார்க்கும் கலக்கத்தில் போர் ஊக்கத்தையும் இழப்பர். இதனையும் உள்ளடக்கியே திருவள்ளுவர்,

”சிறுகாப்பிற் பேரிடத்த தாகி, உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்”(744)

என்றார்.

அரண் பற்றி மற்றொரு குறள் காட்டும் உண்மை இக்காலத்தில் அண்மையில் பாரசீக வளைகுடாப் போரின் போது வெளிப்பட்டது.

ஈராக் நாட்டு வல்லாட்சியர் சதாம் என்பவர் அண்டைச் சிறுநாடான குவைத்தை ஆட்படுத்திக் கொண்டார். இதனால் போர்மூளும் என்று எதிர்பார்க்க அவர் தம் நாட்டில் நிலத்திற்கடியில் ஒரு கோட்டையை உருவாக்கினார். அது ஒரு நகர் போன்றே அனைத்து நலங்களையும், வளங்களையும் கொண்டதாக அமைக்கப்பெற்றது. வல்லமை வாய்ந்த நிலத்தடி அரண்தான் அது. ஆனாலும், சதாம் உலகநல நாடுகளின் தாக்குதலால் பெருந்தோல்வி கண்டார். அவர் அமைத்த நிலத்தடி நகரும் ஏமத்தைத் தரவில்லை. அது மிக மாட்சிமை மிக்கதுதான். ஆயினும், ஏமமாகவில்லை. காரணம், சதாம் செய்த வேண்டாத தீமைகளால் அவர் செய்த செயல்கள்-வினைகள் மாட்சிமை அற்றவையாயின.

“எனை மாட்சித் தாகியக் கண்ணும், வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்”

 (750)